Published : 14 Oct 2024 05:45 AM
Last Updated : 14 Oct 2024 05:45 AM

பேருந்தில் ஓட்டுநர், நடத்துநரில் ஒருவர் நிரந்தர பணியாளராக இருக்க வேண்டும்: மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவு

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக நாள்தோறும் 3,233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறையுள்ள நிலையில், அனைத்து பேருந்துகளையும் இயக்கும் வகையில் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்கள் பணியமர்த்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஆராய்ந்தபோது, விபத்துக்கு உள்ளாகும் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் இருவரும் தற்காலிக பணியாளர்கள் என்பதால், விபத்து நடந்தவுடன் அதன் உண்மைத் தன்மையை அறிவது கடினமாக உள்ளது. குறிப்பாக வழித்தடத்தில் நடக்கும் சம்பவங்கள் முழுமையாக நிர்வாகத்துக்கு தெரிய வருவதில்லை.

இதுகுறித்து போக்குவரத்து துறை தலைவர் அலுவலகத்தில் இருந்தும் அறிவுறுத்தல் கடிதம் வந்துள்ளது. எனவே, விபத்துகள் ஏற்படாத வண்ணம், பாதுகாப்பாக பேருந்தை இயக்க அனைத்து பணிமனை கிளை மேலாளர்களும் தங்களது பணிமனையில் உள்ள தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்களை ஒரே பேருந்தில் பணியமர்த்தாமல், ஓட்டுநர், நடத்துநர் இருவரில் ஒரு நிரந்தர பணியாளரையாவது பணியமர்த்தி பேருந்தை இயக்க வேண்டும். இதுகுறித்து மண்டல மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x