Published : 14 Oct 2024 05:56 AM
Last Updated : 14 Oct 2024 05:56 AM
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீர்வள ஆதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுவடையும் என்றும் அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் விரைவாக செய்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் திருவள்ளூர் மாவட்டத்திலும், செம்பரம்பாக்கம் ஏரி காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளதால் இந்த மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்போது ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும். அதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்தை தீவிரமாக கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு நீர்வள ஆதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும் போது அது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தலைமை இடத்துக்கு தெரிவிக்கும்படியும் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கனஅடி. நேற்றைய நிலவரப்படி ஏரிகளில் 3,882 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. கடந்தாண்டு இதே நாளில் 9,064 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT