Published : 14 Oct 2024 06:40 AM
Last Updated : 14 Oct 2024 06:40 AM

சிகார் லைட்டர், உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை: சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

சிவகாசி: சிகார் லைட்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகார் லைட்டர்களால் தீப்பெட்டி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் உள்ள தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே, சிகார் லைட்டர்களுக்கு தடை விதிக்கக் கோரி தீப்பெட்டித் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.20-க்கும் குறைவான பிளாஸ்டிக் மலிவு விலை சிகார் லைட்டர்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால் தீப்பெட்டி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், சீனாவில் இருந்து சிகார் லைட்டர் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, உள்நாட்டிலேயே தயாரித்து மலிவு விலையில் மீண்டும் சந்தையில் விற்பனைக்கு வந்ததால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமான தீப்பெட்டித் தொழிலை காக்கும் வகையில், அனைத்து வகை சிகார் லைட்டர்கள் மற்றும் சிகார் லைட்டர் உதிரிப் பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், அனைத்து வகை சிகார் லைட்டர்கள் மற்றும் எரிவாயு நிரப்பக்கூடிய மற்றும் நிரப்ப முடியாத உதிரிப் பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்கான இலவசப் பட்டியலில் சிகார்லைட்டர்கள் இருந்ததால், சுலபமாக இறக்குமதி செய்து, சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர். இதனால் தீப்பெட்டித் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.20-க்கும் கீழ் விலை குறைவான சிகார் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனாலும், ரூ.20-க்கு மேல் விலை கொண்ட லைட்டர்கள் இறக்குமதிக்கான இலவசப் பட்டியலில்தான் இருந்து வந்தது. இதனால் உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்து, லைட்டர் தயாரித்து ரூ.10-க்கும் குறைவான விலையில் சந்தையில் விற்பனைக்கு வந்ததால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். சமீபத்தில் விருதுநகர் வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தோம். இந்நிலையில், சிகார் லைட்டர்கள் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு முழுமையான தடை விதித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிதியமைச்சர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறும்போது, “இந்த கோரிக்கைக்காக சிவகாசி பகுதியைச் சேர்ந்த தீப்பெட்டி உற்பத்தியாளர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து, மனு அளித்தோம். இதன் பலனாக, சிகார் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி,மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x