Published : 13 Oct 2024 07:45 PM
Last Updated : 13 Oct 2024 07:45 PM
சென்னை: பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படி, அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பல்வேறு ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளனர். மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள், ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அரசின் சார்பில் உரிய அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருந்தாலும், பொதுமக்கள் தங்கள் குறைந்தபட்ச தேவைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஓரிரு நாட்களுக்குத் தேவையான அளவில் அரிசி, பருப்பு, எண்ணெய், முட்டை, காய்கறிகள், குழந்தைகளுக்கான பிஸ்கட், தின்பண்டங்கள் ஆகியவற்றைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களுக்குத் தேவையான துணி, மெழுகுவத்தி, தீப்பெட்டி, கொசுவத்தி, சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் வீட்டில் உள்ளனவா என்று கவனித்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லாத பொருட்களை மட்டும் அளவாக வாங்கிக் கொள்ளவும்.
குடிநீரைத் தேவையான அளவு சேமித்து வைத்துக் கொள்வதுடன், தேவையான மருந்து மாத்திரைகளையும் கையிருப்பில் வைத்துக் கொள்ளவும். கைபேசிகள், லேப்டாப், பவர் பேங்க் இருப்பின் அவற்றை முழுமையான சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பதட்டப்படவோ, பயப்படவோ தேவையில்லை. தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
பெரும்பாலான மக்கள் இத்தகைய தயார்நிலையில் இருப்பின், அரசாங்கம் தனது முழு கவனத்தையும் ஏழை, எளிய மக்களின் மீது செலுத்தலாம்; அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனே செய்து விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.
மழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது. ஒருவேளை இயற்கை வழக்கத்திற்கு மாறாகப் பெருமழைப்பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதட்டமின்றி மழைக்காலத்தை எதிர்கொள்வோம்.
பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் அரசுடன் துணையாக நிற்க வேண்டும் என திமுக தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஒன்றிய, பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்த வேண்டும். கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலேயே முழுமையாக இருந்து மக்களுக்கு உதவ வேண்டும்.
மழைக்காலத்தில் கழகத்தினர், அரசு, பொதுமக்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களும், தன்னார்வலர்களும் முன்வைக்கும் கோரிக்கைககள், மழை தொடர்பாக தெரிவிக்கும் தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அது தொடர்பான மேல் நடவடிக்கைக்கு நிர்வாகிகள் வழிவகை செய்யலாம். குறிப்பாக, களத்தில் தன்னார்வலர்களுடன் கை கோத்து, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை அரசிடமிருந்து பெற்றுத் தரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மழையால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துக் கொள்வது அவசியம்.
குடிநீர், பால் ஆகிய இரண்டும் மிக அவசியமான தேவையாக இருக்கும். எனவே தங்கள் பகுதிகளில் அவை தடையின்றிக் கிடைக்கிறதா என்பதைக் கண்காணித்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மீட்புப்பணிகளை மேற்கொள்ள வரும் மாநகராட்சி, மின்வாரிய ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதை உறுதிசெய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT