Published : 13 Oct 2024 06:18 PM
Last Updated : 13 Oct 2024 06:18 PM
பழநி: மழைக் காலம் தொடங்கி விட்டதால், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என அதிகாரிகளுக்கு உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
பழநியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீர் ஆய்வு மேற்கொண்டார். கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு ஆகிவயற்றின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் பாமாயில் , சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து நியாய விலை கடைகளுக்கு தேவைக்கேற்ப பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் மழைக்காலம் துவங்கி விட்டதால் நியாய விலை கடைகளில் தட்டுப்பாடு இன்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நியாய விலைக் கடைகளில் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், “தமிழகத்தில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் 37 ஆயிரம் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த நியாய விலை கடையில் வேண்டுமானாலும் பொருட்களைப் பெற்றுக் செல்லும் முறை நடைமுறையில் உள்ளது. அதற்கு ஏற்ப நியாய விலைக் கடைகளில் பொருட்கள் இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு சில நியாய விலைக் கடைகளில் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த நபர்கள் பொருட்களை வாங்க செல்லும்போது தடங்கல் உள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது மழை காலம் தொடங்கிவிட்டதால் தாழ்வான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உள்ள பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் கனமழை பெய்துள்ள இடங்களில் பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது 37 ஆயிரம் கடைகளில் 6000 கடைகளுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேலும் அதனை அதிகப்படுத்தி ஆண்டுக்கு பத்தாயிரம் கடைகள் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT