Last Updated : 13 Oct, 2024 06:02 PM

 

Published : 13 Oct 2024 06:02 PM
Last Updated : 13 Oct 2024 06:02 PM

மதுரை | மாணவர்களை ஆக்கபூர்வமாக வளர்த்தெடுக்க ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

மதுரை: கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களை ஆக்கப்பூர்வமாக வளர்த்தெடுக்க வேண்டும் என, காமராஜர் பல்கலை. கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் வலியுறுத்தினார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரியில் திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்க மதுரை மண்டல அறிமுகக் கூட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் மாரப்பன் தலைமை வகித்தார். திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி பேசுகையில், “பெண்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் ஆரிய மாயைகளில் இருந்தும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் வெளியேற வேண்டும். பெண் விடுதலையால் மட்டுமே சமூக விடுதலை சாத்தியப்படும் என்பது திராவிடக் கருத்தியலின் அடிப்படைகளில் ஒன்று.

நவீன காலத்தில் பெண்களின் அடையாளங்களாக எவையெல்லாம் இருக்க வேண்டும், பெண்கள் எவ்வாறெல்லாம் செயல்பட வேண்டும் என்பது குறித்து திராவிடக் கருத்தியல் தெளிவான சிந்தனை வழிகாட்டுதலை கொண்டுள்ளது.

அண்ணாவும், கலைஞரும் திமுக ஆட்சியில் தந்தை பெரியாரின் வழி நின்று கல்வி உரிமை, சொத்துரிமை, இட ஒதுக்கீடு முதலிய அடிப்படைப் பெண்ணுரிமைகளை சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர். தற்போதைய திராவிட மாடல் அரசு, மாணவர்கள் , பெண்களின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்துகிறது” என்றார்

முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் சிறப்புரையாற்றும்போது,“கீழடி அகழாய்வு மூலம் திராவிட தமிழ் நாகரீகம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தைக் கடந்து இந்தோனேசியா ஜாவா தீவுகள் என தெற்காசிய பரப்பு முழுவதும் பரவியுள்ளது. ஆசிரியர்கள் திராவிடக் கருத்தியலில் உறுதியாக இருந்து மாணவர்களை அறிவுப்பூர்வமாக வளர்த்தெடுக்க வேண்டும்.” என்றார்.

முன்னதாக காமராசர் பல்கலைக்கழகம் முன்னாள் பேராசிரியர் நாகூர்கனி வரவேற்றார். பேரசிரியர் பழனிவேல் நன்றி கூறினார்.முனைவர் க.சி பழனிக்குமார் தொகுத்து வழங்கினார் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x