Published : 13 Oct 2024 04:59 PM
Last Updated : 13 Oct 2024 04:59 PM
வேலூர்: இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் வறுமைக்கோட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தால் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் துசார் காந்தி பெஹரா கூறினார்.
வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலையில் 19-வது பட்டமளிப்பு விழா இன்று (அக்.13) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். முன்னதாக, பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் துசார் காந்தி பெஹரா பங்கேற்று பேசும்போது, “நமது எதிர்காலத்துக்கான உலகளாவிய சவால்களை இளைஞர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். உலக மக்கள் தொகை தற்போது 8 பில்லியனாக உள்ளது. இது 2100ம் ஆண்டு 10.4 பில்லியனாக எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மக்கள் தொகை 2060-ல் 1.7 பில்லியனாக (170 கோடி) என்றளவுக்கு உயர்ந்து 2100ல் 1.5 பில்லியனாக (150 கோடி) குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 2021ல் 90 கோடியில் இருந்து அடுத்த பத்தாண்டுகளில் 100 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் வறுமைக்கோட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை பல்வேறு வகைகளில் குறைந்துள்ளது. இதன்மூலம், நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை 30 கோடியாக அதிகரித்துள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தால் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை வரும் 2031-ல் 38 சதவீதமாகவும், 2047ல் 60 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாசா கணிப்பின்படி காலநிலை மாற்றம் தற்போதைய நிலையில் தொடர்ந்தால் 0.94 டிகிரி செல்சியசில்ஸ் என்றளவில் இருந்து 2100-ல் 2.13 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்தால் அதை எதிர்கொள்ள மக்கள் தயாராகவில்லை. உலகளவில் 3.50 லட்சம் வகையான மாறுபட்ட ரசாயனங்கள் பல்வேறு வகை உற்பத்தி நிறுவனங்களில் பயன்படுத்துவதால் ஆறுகள், ஏரிகள், கடல்களின் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. உலக மக்கள் தொகையில் 18% அளவுக்கு கார்பன் மாசு ஏற்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. ஆனால், இந்தியா 2070-க்குள் பூஜ்ஜிய கார்பன் வெளியீட்டை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு இந்தியரும் தரமான திறன் மேம்பாடு அது தொடர்புடைய வளர்ச்சி வாய்ப்புகள் கிடைக்க ‘ஸ்கில் இந்தியா டிஜிட்டல்’ வழிவகை செய்கிறது. இது ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இடையில் ஒரு பாலமாக விளங்குகிறது. கரோனா காலத்தில் இந்தியா உலகளாவிய விவசாய சக்தி மையமாக இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உணவு உபரி காரணமாக அந்த காலகட்டத்தில் மற்ற நாடுகளுக்கு விநியோகித்தோம். பால், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருக்கிறோம். நாம் உலகின் மிகப்பெரிய கால்நடைக் கூட்டத்தை கொண்டிருப்பதுடன் கோதுமை, அரிசி, பருத்தி, கரும்பு, பண்மை மீன், ஆட்டிறைச்சி, காய்கறி, பழங்கள், டீ உற்பத்தியில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். கடந்த ஐந்தாண்டுகளில் இந்திய விவசாயத்துறை வளர்ச்சி விகிதம் 4.2% ஆக உள்ளது.
கல்வித்தகுதி மட்டுமே உங்களை நல்ல மனிதராக மாற்றாது. ஆனால், உங்கள் நற்செயல் உங்களுக்கு சமூகத்தில் நல்ல பெயரை பெற்றுத்தரும். புத்தங்களில் இருந்து கற்றுக்கொள்வது கற்றல். வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்வது ஞானம் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் உயர்கல்வி என்ற கோயிலில் பெற்ற அறிவுடன் உங்கள் வாழ்க்கையின் புதிய சவாலான கட்டத்திற்குள் நுழைகிறீர்கள். கடின உழைப்பு, சகிப்புத்தன்மை, பொறுமை, அர்ப்பணிப்பு போன்றவற்றுடன் விடாமுயற்சியுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
திருவள்ளுவர் பல்கலையில் மொத்தம் 28 ஆயிரத்து 417 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில், 155 மாணவர்கள் நேரடியாக பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா அரங்கில் பட்டம் பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT