Published : 13 Oct 2024 04:35 PM
Last Updated : 13 Oct 2024 04:35 PM

ஆயுதபூஜை சிறப்பு இயக்கத்தில் தனியார் பேருந்துகள்: தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு

பிரதிநிதித்துவப்படம்

சென்னை: ஆயுத பூஜையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்து இயக்கத்தில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு பயன்படுத்தியதற்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் டி.வி.பத்மநாபன், போக்குவரத்து துறைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 1972-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில், நாட்டிலேயே அதிகமான அளவில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தச்சூழலில், பேருந்து இயக்கத்தில் தனியாரை அனுமதிப்பது என்பது போக்குவரத்துக் கழகங்களின் உன்னதமான கொள்கையை அழித்தொழிக்கும் செயல். இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள், அரசு நிர்வாகத்தினுடைய எண்ணங்களில் இருந்து நிச்சயமாக நீக்கப்பட வேண்டும்.

தற்போது, மக்கள் கூட்டத்தை சமாளிப்பதை காரணமாக கூறி தனியார் பேருந்துகளை அரசு வழித்தடத்தில் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இது நீதிமன்ற விதிகளுக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் எதிரான நடவடிக்கையாகும். குறிப்பாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.

எனவே, மலிவு விலையில் மகத்தான சேவை வழங்கும் போக்குவரத்துக் கழகங்களை மிகையான கட்டணத்தில் லாபம் பார்க்கும் தனியாரிடம் வழங்குவதை கனவில் கூட நினைத்து பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

அதற்கு பதிலாக போதிய நிதியுதவியைப் பெற்று, போக்குவரத்துக் கழகங்களுக்கு புத்துயிர் கொடுத்து , பொதுமக்களுக்கு வலுவான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x