Last Updated : 13 Oct, 2024 03:47 PM

 

Published : 13 Oct 2024 03:47 PM
Last Updated : 13 Oct 2024 03:47 PM

புதுச்சேரியில் அட்டவணை இன மக்களுக்கு ஆண்ட, ஆளுகின்ற அரசுகள் துரோகம்: அதிமுக தாக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் அட்டவணை இன மக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காமல் ஆண்ட, ஆளுகின்ற அரசுகள் மறுத்து வருகிறது என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய மற்றும் இருப்பிடம், வசிப்பிடம், பிறப்பு சான்றிதழ் இவற்றை பதிவு செய்யாத அட்டவணை இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு உரிய அங்கீகாரத்தை புதுச்சேரியில் ஆட்சி செய்த, செய்துகொண்டிருக்கின்ற அரசுகள் வழங்க மறுத்து வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருசிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வரை சென்று தங்களுக்கு உரிய தீர்ப்பினை பெற்று வந்துள்ளனர். இதில் தாயின் பிறப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தீர்ப்பு பெற்றுள்ளனர். இதை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெற்றோர்களின் இருப்பிடத்தை கணக்கிடும் போது, தாயின் பிறப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.

இது சம்மந்தமாக அதிமுக சார்பில் பலகட்ட போராட்டங்களும், துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமை செயலர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த கருத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் எம்பியும் மனு அளித்தார். 50 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரி மாநிலத்தில் வசித்துக்கொண்டு அரசின் தவறான சட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் நீதி வழங்கப்படும் விதத்தில் அரசு மாநிலம் முழுவதும் பொருந்த கூடிய ஒரு அரசாணையை பிறப்பித்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த விவகாரத்தில் ஆளும் அரசானது உயர்நீதிமன்றம் மற்றும் அதன் உத்தரவுகளை அமுல்படுத்தவில்லை. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் அட்டவணை இனத்தவருக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கும் போது புதுச்சேரியில் பிறந்த பெண்களையும் பெற்றோர்களாக கருதி அவர்களின் பிள்ளைகளுக்கு 1964-ன் படி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்கின்ற வழிகாட்டுதல் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பினை புறக்கணித்து உதவி மாவட்ட ஆட்சியர் (வடக்கு) தனக்கு கீழ் பணியாற்றும் வட்டாட்சியர்களுக்கு குறிப்பாணை வழங்கியிருப்பது தவறான ஒன்றாகும். எனவே ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசானது பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அட்டவணை இனத்து மக்களை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் புதுச்சேரியில் பிறந்த பெண்களையும், பெற்றோர்களாக கருத்தில் கொண்டு உரிய சான்றிதழ் வழங்க உரிய அரசாணையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகரக் கழக செயலாளர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x