Published : 13 Oct 2024 03:10 PM
Last Updated : 13 Oct 2024 03:10 PM

“அதிதீவிர மழைக்கு வாய்ப்பு; விளைவுகளை எதிர்கொள்ள அரசு தயார்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: “அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம். இதில் பொதுமக்களின் உயிரும். உடைமைகளும் காக்கப்பட வேண்டும் என்பது தான் முதல் முக்கியத்துவம் அதை மனதில் வைத்தே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு மற்றும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள பணிகளை ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து,1913 கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வாப்பெற்ற புகாருக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: வடகிழக்குப் பருவமழை நிலையில் தொடங்கவுள்ள அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை, தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக வருவாய்த்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் அடிப்படையில், அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 20 செ.மீக்கு மேலான மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம். இதில் பொதுமக்களின் உயிரும். உடைமைகளும் காக்கப்பட வேண்டும் என்பது தான் முதல் முக்கியத்துவம் அதை மனதில் வைத்தே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழைக்காலத்தில் பொதுமக்களுக்கான பிரத்யேக உதவி எண்ணாக 1913 வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அறையில் மொத்தம் 150 நபர்கள் 4 சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் வழங்குவார்கள். அவசர உதவி எண் தவிர, சமூக ஊடகம் (Social Media), வாட்ஸ்ஆப், 'நம்ம சென்னை தளம் போன்றவற்றிலும் மழை பற்றிய தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படும்.

மேலும், அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு 13 ஆயிரம் தன்னார்வலர்கள் ரகள் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் வெளியேற்றுவதற்காக 100 குதிரைத் திறன் கொண்ட 100 எண்ணிக்கையிலான மோட்டார் பம்புகள் தாழ்வான பகுதிகளில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கக்கூடியவை என்று கண்டறிப்பட்டுள்ள 31 இரயில்வே கல்வெட்டுகள் ஆழமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த நிவாரண மையங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு உறுதி செய்து நிறைவேற்றி தருவார்கள். இதுமட்டுமன்றி தமிழ்நாடு அரசின் சார்பில் "TN ALERT" என்ற புதிய செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து மழைப்பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

பல்வேறு வானிலை மாதிரிகளைப் பயன்படுத்தி, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அனைத்துப் பகுதிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் உள்ள ஓரிரு இடங்களில், அவற்றை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பார்வைக்கு அப்படி ஏதாவது மூடப்படாமல் இருக்கும் கழிவுநீர் பாதைகள் பற்றி தகவல் தெரிந்தால், அதனை மாநகராட்சிக்கு ட்விட்டர் போன்ற தளங்களில் தெரிவிக்கலாம். அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தரையின் மேலே கிடக்கும் அனைத்து கேபிள்களையும் மூடுவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மின்சாரத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. தாழ்வான மின்மாற்றிகள் அதிக உயரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் மின்சாரத்துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் பாதிப்படையாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் அரசு தரப்பில் அலுவலர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 356 நீரேற்று நிலையங்களும் ஜெனரேட்டர்கள் மூலம் இயங்கும் வகையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜெட்ராடிங், தூர்வாரும் இயந்திரங்கள் சூப்பர் சக்கர் உள்ளிட்ட 373 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பணிகளில் கூடுதலாக 83 கழிவுநீரகற்றும் வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்த மழைநேரத்தில் தமிழ்நாடு அரசு தருகின்ற வழிகாட்டுதல்களையும் முறையாகப் பின்பற்றி பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் ஊடகவியலாளர்கள் பத்திரிகையாளர்கள் மக்களுக்கு பொறுப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் செய்திகளை வெளியிட வேண்டும் நாம் அனைவரும் கரம் கோர்த்து, இந்த மழைக்காலத்தில் நம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x