Published : 13 Oct 2024 08:28 AM
Last Updated : 13 Oct 2024 08:28 AM

மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்: மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

சென்னை: பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும், தமிழகத்திலும் மகத்தான வெற்றி பெற்ற தலைவராக மோடி வருவார் என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு 1,000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பாரா லிம்பிக் வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா சென்னை தி.நகரில் நேற்று நடந்தது.

விழாவில், மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் டால்பின் தர், மாநில செயலாளர் மற்றும்நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனர், அறங்காவலர் வினோஜ் பி.செல்வம், தமிழ்நாடு திரையரங்க சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், வழக்கறிஞர் கே.டி.ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில் இவ்வளவு தோல்விக்கு பிறகும், ஒருதலைவனுக்கு பிறந்தநாள் விழாகொண்டாட வேண்டும் என்றஎண்ணம் வருகிறது என்றால் அவர்தான் உண்மையான தலைவர். தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளை அள்ளித் தந்தவர் பிரதமர் மோடி மட்டும்தான். தமிழனின் மகத்தான குணமான விருந்தோம்பலை, ஐநா-வின் மைய மண்டபத்தில் இருந்து உலகத்துக்கு பறைசாற்றினார்.

தனது கட்சிக்கு ஒரு எம்.பி.கூட கொடுக்காத தமிழகத்துக்கு, சென்னை, வேலூர், சேலம், ஈரோடு,திருப்பூர், கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி என இத்தனை ஸ்மார்ட் சிட்டிகளை மோடி அள்ளிக் கொடுத்துள்ளார்.

மோடி செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும், அதன்மூலம் இந்த மண்ணில் தேசபக்தி பரவவேண்டும் என்பதுதான் அவரது பிறந்தநாளின் மையக் கருத்தாக அமைந்திருக்கிறது. தமிழகத்திலும் மகத்தான வெற்றி பெற்ற தலைவராக பிரதமர் மோடி வருவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, ‘‘பாஜக 2014-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு விளையாட்டுத் துறையில் இந்தியா ஏற்படுத்தியிருக்கிற தாக்கம் அளப்பறியது. 2047-ல்இந்தியா வல்லரசாக்கும் முனைப்பில் பிரதமர் மோடியின் வழியில் மாணவர்கள் பின் தொடர்ந்து செல்லவேண்டும். இந்தியா 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, நம் நாடு வல்லரசாக மாறியிருக்க வேண்டும். அதற்கு இணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x