Published : 12 Oct 2024 07:47 PM
Last Updated : 12 Oct 2024 07:47 PM
சென்னை: ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தைப் போலவே, கவரைப்பேட்டை ரயில் விபத்தும் நிக்ழந்திருப்பது டேட்டா - லாக்ர் வீடியோ (data - logger video) மூலம் உறுதியாகி இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடக்கத்தில் இந்த ரயிலுக்கு முதன்மை தடத்தில் செல்ல பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டது. இருப்பினும், ரயில் தண்டவாளத்தில் நிகழ்ந்த தவறான இன்டர்லாக் காரணமாக அது லூப் தடத்தில் நுழைந்து நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியது. அதேபோல், கவரைப்பேட்டையில் விபத்தில் சிக்கிய மைசூரு - தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் முதன்மை தடத்தில் செல்ல பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் அது லூப் தடத்தில் சென்று நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரயில் இயக்கம் மற்றும் சிக்னல் அம்சங்களைப் படம் பிடிக்க ரயில் நிலையப் பகுதியில் வைக்கப்படும் டேட்டா - லாகர் என்ற சாதனம் பதிவு செய்துள்ள வீடியோவில் இது தெரிய வந்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ, இன்று (அக்.12) காலை முதல் மூத்த ரயில்வே அதிகாரிகளின் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, ரயில்வே வாரியம் நேற்று (வெள்ளியன்று) வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில், பயணிகள் ரயில் முதன்மை தடத்தில் செல்வதற்கு பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால், ரயில் ஒரு சிறிய அதிர்வுடன் லூப் தடத்தில் நுழைந்ததாகவும் அதன் காரணமாக சரக்கு ரயிலுடன் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
"இதுவரை வெளியாகி உள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த விபத்து, ஜூன் 2, 2023 அன்று நடந்த பாலசோர் ரயில் விபத்துடன் ஒத்துப் போவதாகத் தெரிகிறது. சிக்னல் அமைப்பில் உள்ள குளறுபடிகளை அகற்ற ரயில்வே தீவிர அணுகுமுறையை எடுக்க வேண்டும்" என்று தெற்கு ரயில்வேயின் அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷன் தலைவர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.
"ரயில் தண்டவாளங்கள் தானியங்கி சிக்னலிங் முறையில் இயங்குகின்றன. சிக்னலின் அடிப்படையில் ரயில் தடங்களில் இன்டர்லாக்கிங் நிகழ்கிறது. அதாவது முதன்மை தடத்தில் பச்சை சிக்னல் இருந்தால், ரயில் முதன்மை தடத்தில் வரும் வகையில் தானாகவே இன்டர்லாக் அமையும். சிக்னல் மற்றும் இன்டர்லாக்கிங் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது சிக்னலிங் அமைப்பில் உள்ள சில தவறுகளால் ஏற்படுகிறது. இது ஒருவித தொழில்நுட்பக் கோளாறாகத் தெரிகிறது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.
சிக்னலிங் மற்றும் இன்டர்லாக் அமைப்பில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லாமல் முந்தைய அனைத்து ரயில்களும் இந்த ரயில் நிலையத்தின் வழியாகச் சென்றது என ஆச்சரியம் அளிப்பதாக இந்திய ரயில்வே லோகோ ரன்னிங்மென்ஸ் அமைப்பின் செயல் தலைவர் சஞ்சய் பாண்டி தெரிவித்துள்ளார். “இது பாலசோரில் நிகழ்ந்த விபத்தோடு முரண்படுகிறது. பாலசோரில், சிக்னல் பழுது நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே மோதல் ஏற்பட்டது. அதற்கு நேர்மாறாக, கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் அப்படி எதுவும் இல்லாத நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இயந்திர சாதனங்களில் ஏற்பட்ட பாதிப்பால் சில செயலிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இதன் காரணமாக சிக்னல் மற்றும் இன்டர்லாக் ஆகியவற்றிடையே ஒருங்கிணைப்பு நிகழாமல் போயிருக்கலாம்" என்றும் சஞ்சய் பாண்டி கூறியுள்ளார்.
"டேட்டா லாக்கரின் யார்ட் - சிமுலேஷன் வீடியோ, சம்பந்தப்பட்ட ரயில் முதன்மை தடம் மற்றும் லூப் தடம் ஆகிய இரண்டிலும் செல்வதைக் காட்டுகிறது. இது சாத்தியமில்லை. எனவே, ரயில் இன்டர்லாக் பாயிண்ட்டில் தடம் புரண்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. என்ஜினும் சில பெட்டிகளும் லூப் தடத்தில் சென்று சரக்கு ரயிலில் மோதியதால், மீதமுள்ள பெட்டிகள் முதன்மை தடத்தில் ஏறியுள்ளன" என்று வடக்கு ரயில்வேயில் தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கே.பி.ஆர்யா தெரிவித்துள்ளார்.
"இது ஒரு பரவலாக அறியப்பட்ட (ஆனால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படாத) ரயில் தடங்கள் மற்றும் இன்டர்லாக்கிங் - பாயின்ட் இயந்திர பொறியியல் குறைபாடு. இது குறித்து ரயில்வே வாரியம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆகியோருக்கு எனது பதவிக் காலத்தில் எடுத்துரைத்துள்ளேன்" என்றும் ஆர்யா கூறியுள்ளார்.
கவரைப்பேட்டை ரயில் விபத்து: நடந்தது என்ன? - கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது. பாக்மதி அதிவிரைவு ரயில் வெள்ளிக்கிழமை இரவு 8.27 மணி அளவில், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. மேலும் ரயிலின் பார்சல் பெட்டியில் அடிப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீஸார், ஆர்.பி,எஃப். போலீஸார், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் 19 பேர் படுகாயமடைந்தனர். தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதவிர, 3 பயணிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கவரைப்பேட்டை அருகே திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பயணிகளை, பேருந்துகள் மூலமாக, பொன்னேரி நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து இரண்டு மின்சார ரயில்கள் மூலமாக சென்ட்ரலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை இந்த பயணிகளை சிறப்பு ரயிலில் தர்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 உயரதிகாரிகளை கொண்ட குழுவை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது. இதில் இயந்திரவியல், இயக்கவியல், தண்டவாள பராமரிப்பு துறை, சிக்னல் மற்றும் தொலைதொடர்பு, ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஆகிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். விபத்துக்கு சிக்னல் தொழில் நுட்ப பிரச்னையா அல்லது மனித தவறா, வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க உள்ளனர். மேலும், ரயில்வே போலீஸாரும் வழக்குப் பதிந்து, விசாரணையை தொடங்கி உள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 9 பெட்டிகள் வரை அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பெட்டிகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. தண்டவாளத்தில் இருந்த பெட்டிகளை அகற்றிய பிறகு, ரயில் தண்டவாளம் சீரமைப்புபணி தொடங்கவுள்ளது. இதற்கிடையில், விபத்து நடைபெற்ற இடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி சனிக்கிழமை பகலில் ஆய்வு செய்தார்.
ரயில்வே தண்டவாளம், சிக்னல் பகுதி, நிலையத்தில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு பகுதி, கட்டுப்பாட்டு அறை உள்பட சிக்னல் மற்றும் இயக்கக பிரிவுகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பிறகு, செய்தியாளர்களிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி கூறுகையில், “விசாரணையை தொடங்கி இருக்கிறோம். விசாரணைக்கு பிறகே, விபத்துக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும்,” என்றார். கவாச் கருவி இருந்திருந்தால், இந்த விபத்து தவிர்த்திருக்க முடியும் தானே என்ற கேள்விக்கு, “கவாச் கருவிக்கும் இந்த விபத்துக்கும் எந்த சம்பந்தம் இல்லை” என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பதிலளித்தார்.
இந்த ரயில் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே பிரதான பாதையில் வருவதற்காக, பச்சை நிற சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அருகே வந்தபோது, பலத்த அதிர்வு ஏற்பட்டு, 70 கி.மீ. வேகத்தில் கிளை பாதையில் (லூப் லைனில்) சென்று, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளனதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | பார்க்க > கவரைப்பேட்டை ரயில் விபத்து: புகைப்படத் தொகுப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT