Published : 12 Oct 2024 12:35 PM
Last Updated : 12 Oct 2024 12:35 PM

ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்: செல்வப்பெருந்தகை

சென்னை: “கடந்த 2014 முதல் 2023 வரை மத்திய பாஜக ஆட்சியில் நடந்த ரயில் விபத்துகளில் 281 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 1543 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். எனவே தொடர்ந்து நடைபெற்று வருகிற ரயில்வே விபத்துகளுக்கும், உயிர் இழப்புகளுக்கும், பாதிக்கபப்ட்டவர்களுக்கும் பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு அருகில் கவரப்பேட்டையில் பாக்மதி விரைவு ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டு ரயில் பெட்டிகள் சிதறிக் கிடக்கின்ற கோர நிகழ்வு நடந்துள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக மெயின் லைனில் போக வேண்டிய விரைவு ரயில் லூப் லைனில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதி ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் 293 பேர் மரணமடைந்து ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்த நிகழ்வுக்குப் பிறகு ரயில் விபத்து ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரயில்வே அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தார். விபத்து நடைபெறாமல் தடுக்கின்ற பாதுகாப்பு கவசமாக கவாச் பொருத்தப்பட்டு விபத்து நடக்காமல் தடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்து இத்தகைய விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த 2014 முதல் 2023 வரை மத்திய பாஜக ஆட்சியில் நடந்த ரயில் விபத்துகளில் 281 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 1543 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இத்தகைய விபத்துகளை தடுப்பதற்கு தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான கவாச் பொருத்துவதற்கு நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு கூறியது. ஆனால் இதுவரை 1465 கிலோமீட்டருக்கு தான் கவாச் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த வேகத்தில் பொருத்தப்பட்டால் அனைத்து ரயில் பாதைகளிலும் கவாச் பொருத்த இன்னும் எத்தனை ஆண்டுகாலம் தேவைப்படும் என்று தெரியவில்லை. ரயில்வே விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் செய்தி வழங்குவதோடு தமது கடமையை முடித்துக்கொள்கிறார்.

ஆனால் ரயில் விபத்துக்களுக்கு யார் பொறுப்பு?. தமிழக மக்களுக்கு நன்றாக நினைவிருக்கும் 1956-ல் அரியலூரில் நடந்த இரயில் விபத்துக்கு அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்று பதவியை விட்டு விலகிய முன்மாதிரியை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே தொடர்ந்து நடைபெற்று வருகிற ரயில்வே விபத்துகளுக்கும், உயிர் இழப்புகளுக்கும், பாதிக்கபப்ட்டவர்களுக்கும் பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x