Published : 12 Oct 2024 11:57 AM
Last Updated : 12 Oct 2024 11:57 AM

“வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்” - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

மேலும், “கவரைப்பேட்டை ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக 10 இடங்களில் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ரயில் பயணிகளை பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க 20 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது” என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.

சென்னையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று (அக்.12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.

மேலும், பேரிடர் எச்சரிக்கைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள TN-Alert செயலி தயார் நிலையில் இருக்கிறது. அதேபோல், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான என்டிஆர்எஃப்- பிரிவினரும் தயார் நிலையில் உள்ளனர். எந்தப் பகுதியில் பாதிக்கப்படும் என்று கணிக்கப்படுகிறதோ, அங்கு என்டிஆர்எஃப் படையினரை முன்கூட்டியே அனுப்பவிருக்கிறோம்.

மழை பெய்து தண்ணீர் தேங்கியபிறகு, உணவு, குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் பவுடர் பற்றாக்குறை ஏற்படுவதை கடந்தமுறை நடந்த சம்பவங்களின் வாயிலாக அறிந்திருப்பதால், இந்தமுறை முன்னெச்சரிக்கையாக அந்தந்தப் பகுதிகளில் மழை வருவதற்கு முன்பாகவே உணவு, பால் மற்றும் பால் பவுடர்களை சேமித்து வைப்பதற்கான பணிகளையும் அரசு செய்து வருகிறது. எனவே, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கு, தமிழக அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி, கவரைப்பேட்டை சம்பவங்கள்.. தொடர்ந்து அவர் பேசுகையில், “திருச்சியில் நேற்று விமானப் பிரச்சினை வந்த நேரத்தில், தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க, நமது துறையின் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் கூறி, 18 ஆம்புலன்ஸ்களும் 3 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், கவரைப்பேட்டை ரயில் விபத்து சம்பவத்துக்காக 10 இடங்களில் திருமண மண்டபங்களை தயார் நிலையில், வைத்திருந்தோம். அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால், பயணிகளைத் தங்க வைப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

விபத்துக்குள்ளான பயணிகள் ரயிலில் வந்த பயணிகளை பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக 20 பேருந்துகளை தயார் நிலையில் வைத்திருந்தோம்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x