Published : 11 Oct 2024 02:05 PM
Last Updated : 11 Oct 2024 02:05 PM
சென்னை: "தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி நிதி ஒதுக்கியிருப்பது உ.பி. உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான நிதியாகும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டிற்குரிய நிதியினை வழங்கிட வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாஜக தனது பத்தாண்டு கால ஆட்சியில் பாகுபாடு காட்டியது. தனது கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒரு நீதியும், பிற எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு அநீதியும் இழைத்து வந்தது. அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற வாய்ப்பளிக்கவில்லை.
தோல்விக்கு பின்னரும் தனது வெறுப்பு அரசியலை பாஜக கைவிடவில்லை என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியுள்ளது. மாநிலங்களுக்கு வரி பகிர்வு விடுவிப்பில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்குடன் குறைந்த நிதி ஒதுக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒன்றிய அரசு என்பது, அனைத்து மாநிலங்களையும் சமமாக பாவிக்கும் பெருந்தன்மை வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கின்ற கொடிய நடைமுறையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
கூட்டாட்சி தத்துவத்தை நிராகரித்து ஒரு கட்சி ஆட்சி எனும் சர்வாதிகார போக்கை கைவிட்டு ஜனநாயக பண்புகளை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும். தமிழகத்திற்கு ரூ.7268 கோடி நிதி ஒதுக்கியிருப்பது உ.பி. உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான நிதியாகும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டிற்குரிய நிதியினை வழங்கிட வேண்டுமாய், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT