Published : 11 Oct 2024 06:55 AM
Last Updated : 11 Oct 2024 06:55 AM

4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் டிஆர்பி தேர்வு மூலம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன், துறையின் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலர் கே.கோபால், தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆபிரகாம், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, உயர்கல்வி கவுன்சில் துணை தலைவர் எம்.பி.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில், தற்காலிக ஏற்பாடாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து,நிரந்தரமாக உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள்நடந்து வருகின்றன. அந்த வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் விரைவில் தேர்வு நடத்தப்பட்டு, 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட தலைமை பதவிகள் படிப்படியாக நிரப்பப்படும். துணைவேந்தர் நியமனத்தை பொருத்தவரை, அரசு மற்றும் வேந்தராகிய ஆளுநரின் நிலைப்பாடு வெவ்வேறாக உள்ளன.

துணைவேந்தர் தேர்வு குழுவில் யுஜிசி பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என ஆளுநர் வலியுறுத்துகிறார். இதுகுறித்து முதல்வர் மற்றும் அனுபவமிக்க உயர் அதிகாரிகளுடன் கலந்துபேசி, துணைவேந்தர் நியமனத்தில் உள்ள முரண்பாடுகள் களையப்படும். பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x