Published : 11 Oct 2024 07:26 AM
Last Updated : 11 Oct 2024 07:26 AM

டாடா குடும்பத்தின் ‘ஊட்டி வரை உறவு’

உதகை: உதகையில் உள்ள ‘தி ரத்தன் டாடா ஆபீசர்ஸ் ஹாலிடே ஹோம்’ தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மரபைப் போற்றுவதாகவும், உதகையின் அடையாளமாகவும் திகழ்கிறது.

இதுகுறித்து நீலகிரி ஆவணக்காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் கூறியதாவது: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் தாத்தா சர் ரத்தன் டாடா. அவர் டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் 2-வது மகன்.சர் ரத்தன்ஜி கலையின் ஆர்வலராகவும், தானத்தில் சிறந்தவராகவும் இருந்தார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நிறைய பேருக்கு தாராளமாக நன்கொடை அளித்தார். 1916-ல் ஆங்கிலேய அரசுஅவருக்கு `நைட்' பட்டம் வழங்கியது. சர் ரத்தன்ஜி 1893-ல் நவாஜ்பாயை மணந்தார்.

1900-ம் ஆண்டில் அவர்கள் உதகை பெய்டன் சாலையில் 8 ஏக்கர் நிலத்தை வாங்கினர். லண்டனின் வடமேற்கில் உள்ள ஒரு மலையின் பெயரைக் கொண்டு, இதற்கு ‘ஹார்ரோ ஆன் தி ஹில்’ எனப் பெயரிடப்பட்டது. உதகையில் 1841-ம் ஆண்டுக்கு முன்பிருந்த இந்த பங்களா, மிகவும் பழமையான ஒன்றாகும். பின்னர் அதற்கு 'ஹார்னஸ் ஆன் தி ஹில்' என்று பெயரிடப்பட்டது. 1900-ம் ஆண்டுக்கு முன் உதகையில் பல சொத்துகளை வைத்திருந்த கன்லிஃபீ என்பவருக்குச் சொந்தமான இந்த வீடு, பல ஆண்டுகளுக்குப் பின்னர் டானிங் என்பவருக்குச் சொந்தமானது.

சர் ரத்தன்ஜி உதகையில் குறுகிய காலமே தங்கியிருந்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் 1916-ல் இங்கிலாந்துக்கு சென்றார். அங்கு அவர் 1918-ல் உயிரிழந்தார். அவரது மனைவி நவாஜிபாய் டாடா மும்பைக்கு மாற முடிவு செய்து, 1919-ல் உதகையில் உள்ள பங்களாவை உள்ளடக்கிய சர் ரத்தன் டாடா அறக்கட்டளையை உருவாக்கினார். 1922-ம் ஆண்டில்லேடி வெலிங்டன் வேண்டுகோளைஏற்று, `ஹாரோ ஆன் தி ஹில்'பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகளுக்கு அறக்கட்டளையால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இது ராணுவம், கடற்படை அதிகாரிகளுக்காக பயன்படுத்தப்பட்டது. அதிகாரிகளுக்கான ‘கன்வல்சென்ட் ஹோம்’ என்று பெயரிடப்பட்டது. மேலும், வீரர்கள் தங்குவதற்கு 19 இரட்டை படுக்கை அறைகள் கொண்ட பங்களாவாக இதை பிரிட்டிஷ் அரசு விரிவுபடுத்தியது. அதில் இரண்டு அறைகள், ஒரு பெரிய சாப்பாட்டுக் கூடம், சமையல்காரர் வீடு, ஸ்டோர் அறைகள் மற்றும் 43 வேலையாள் குடியிருப்புகள் உள்ளன.

சுதந்திரத்துக்குப் பிறகு ஃபீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா, லேடி நவாஜ்பாய் டாடாவை அணுகி, அந்த சொத்தை இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் விடுமுறை இல்லமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு அவர் ஒப்புதல் அளித்தார். இதனால் ‘தி ஹாரோ ஆன் தி ஹில்’ ‘தி ரத்தன் டாடா ஆபீசர்ஸ் ஹாலிடே ஹோம்’ என்று மாறியது. இது வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சொத்து பழைய உதகையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x