Published : 10 Oct 2024 03:41 PM
Last Updated : 10 Oct 2024 03:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையை ரோபாடிக் இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்தும் பணி இன்று துவங்கியது.
புதுவை ராஜீவ்காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனையில் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. மத்திய அரசு இந்த மருத்துவமனையின் மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கு, பிரசவ வார்டின் தரத்தை மேம்படுத்தியமைக்காக லக்க்ஷ்யா என்ற தேசிய சான்றிதழ் வழங்கியுள்ளது. புதுவையில் முதல்முறையாக இந்த மருத்துவமனைக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய அங்கீகார வாரியம் நுழைவு நிலை சான்றிதழும் வழங்கியுள்ளது. இந்த சான்றிதழை தமிழகம், புதுவையில் முதல்முறையாக இந்த மருத்துவமனை பெற்றுள்ளது. இந்த சான்றிதழ்களை முதல்வர் ரங்கசாமி, மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன், தரம் நோயாளி பாதுகாப்பு நோடல் அதிகாரி குருபிரசாத் ஆகியோரிடம் வழங்கினார்.
இந்த மருத்துவமனையை சுத்தமாக பராமரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த தனியார் நிறுவனம் மருத்துவமனையை ரோபோடிக் எந்திரம் மூலம் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரோபோடிக் எந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணியை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏ-வான ரமேஷ், அரசுச் செயலர் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT