இலங்கையைச் சேர்ந்தவர்கள் அட்டகாசம்: செருதூர் மீனவர்களை தாக்கி வலை, மீன்பிடி கருவிகள் கொள்ளை

இலங்கையைச் சேர்ந்தவர்களால் பாதிப்புக்கப்பட்ட செருதூர்  மீனவர்கள்
இலங்கையைச் சேர்ந்தவர்களால் பாதிப்புக்கப்பட்ட செருதூர்  மீனவர்கள்
Updated on
1 min read

நாகப்பட்டினம்: நேற்று முன் தினம் (அக்.8) நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் மற்றும் புஷ்பவனம் மீனவர்களின் வலைகளை அறுத்தும் பறித்தும் சென்ற இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேற்று (அக்.9) இரவு செருதூர் மீனவர்களின் வலைகளை பறித்துச் சென்றுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செருதூர் மீனவ கிராமத்திலிருந்து கடந்த 8-ம் தேதி காலை, சத்தியசீலன் (50) என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் செருதூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த விஜயன் (31), ரமணன் (22), விக்னேஷ் குமார் ( 21), ரீகன் (21) ஆகிய நால்வரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். 9-ம் தேதி இரவு ஏழு மணி அளவில் கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கே 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 2 ஃபைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய ஆறு நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி மீனவர்களின் படகில் இருந்த 250 கிலோ மதிப்புள்ள மீன்பிடி வலை, செல்போன் 1, ஜிபிஎஸ் கருவி, சுமார் 100 லிட்டர் டீசல் மற்றும் ரேஷன் பொருட்களை பறித்துக் கொண்டு அவர்களை விரட்டியுள்ளனர்.

இதையடுத்து இன்று (அக்.10) காலை கரை திரும்பிய மேற்கண்ட மீனவர்கள் சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். மீனவர்களுக்கு வெளிக்காயம் எதுவும் இல்லை என்பதால் அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லவில்லை. இச்சம்பவம் தொடர்பாக கடலோர காவல்படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in