Published : 10 Oct 2024 01:22 PM
Last Updated : 10 Oct 2024 01:22 PM
சென்னை: கருணாநிதியின் மருமகனும், பத்திரிகையாளருமான முரசொலி செல்வத்தின் மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (அக்.10) முதல் மூன்று நாட்களுக்கு திமுக கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரரும், தலைசிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் இன்று (அக்.10) காலை உயிரிழந்தார். கட்சி தொடங்கப்பட்ட காலம்தொட்டு கட்சியின் கொள்கை பரப்பியவரும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவருமான முரசொலி செல்வத்தின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இன்று (அக்.10) முதல் மூன்று நாட்களுக்கு கட்சி அமைப்புகள் அனைத்தும் கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி நாளிதழை கவனித்து வந்தார். சிலந்தி என்ற புனைப் பெயரில் , முரசொலி நாளிதழில் பல கட்டுரைகளை எழுதி வந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (அக்.10) காலை முரசொலி செல்வம் காலமானார்.
மறைந்த முரசொலி செல்வத்தின் உடல், சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதையடுத்து கோபாலபுரம் இல்லத்துக்கு துணை முதல்வர் உதயநிதி, திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் வந்தனர். ஏராளமான திமுக தொண்டர்களும் அப்பகுதிக்கு வந்துள்ளனர். முரசொலி செல்வத்தின் மறைவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்கள், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT