Published : 10 Oct 2024 01:16 PM
Last Updated : 10 Oct 2024 01:16 PM

தேயிலை வளர்ச்சிக்கு ரூ.668 கோடி நிதி: குன்னூரில் தேயிலை வாரிய செயல் இயக்குநர் தகவல்

குன்னூர்: தேயிலை வளர்ச்சிக்கு நடப்பாண்டு ரூ.668 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேயிலை வளர்ச்சிக்காக இந்த ஆண்டு தென்னிந்தியாவுக்கு 20 சதவீதம் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.முத்துகுமார் கூறியுள்ளார்.

குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்துக்கு தேயிலை வாரிய துணை தலைவர் ராஜேஷ் சந்தர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்துக்கு பின்னர் தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.முத்துகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தேயிலை வளர்ச்சிக்கு நடப்பாண்டு ரூ.668 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் தென்னிந்தியாவுக்கு 20 சதவீத நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களாக தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. விவசாயிகள் தரமான இலையை வழங்கினால் கூடுதல் விலை கிடைக்கும். தற்போது ஆண்டுக்கு 230 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதை 400 மில்லியன் கிலோவாக உயர்த்தவும், உள்ளூர் நுகர்வை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய தேயிலை வாரியம் சார்பில், தேயிலைத் தோட்டங்களில் கவாத்து செய்தல், மறு நடவு செய்தல் போன்றவற்றுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தேயிலை விவசாயிகள், சிறு தேயிலைத் தொழிற்சாலைகள் அமைக்கவும், தரமான தேயிலைத் தூள் தயாரிக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

இதில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சிறு தேயிலை விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடியின சிறு தேயிலை விவசாயிகள், பட்டியலின சிறு தேயிலை விவசாயிகள் அருகில் உள்ள தேயிலை வாரிய அலுவலகத்தை அணுகி மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், சிறு விவசாயிகளின் குழந்தைகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கான உதவியும் வழங்கப்படுகிறது.

மூடப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த அல்லது இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகளுக்கான கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மேலும், புற்றுநோய், சிறுநீரகம், இதயம் அல்லது கல்லீரல் நோய்கள் போன்ற குறைபாடுகள் அல்லது தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்களை சார்ந்திருப்பவர்களுக்கு தேயிலை வாரியம் நிதியுதவி அளித்து வருகிறது.

இவர்களில் தகுதியான நபர்களின் மருத்துவ செலவுக்காக ஒரு முறை மானியமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகைகளை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் போர்ட்டல் https://serviceonline.gov.in அக்டோபர் 15 முதல் இயங்கும்” என்று இயக்குநர் முத்துகுமார் கூறினார். இன்றைய சிறப்புக் கூட்டத்தில், தேயிலை வாரிய துணை இயக்குநர் பால்குனி பானர்ஜி, உறுப்பினர் மனோஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x