Published : 10 Oct 2024 09:15 AM
Last Updated : 10 Oct 2024 09:15 AM

‘பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளம்’ - ரத்தன் டாடா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த நிலையில், “இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டது. எனினும் அவரது வாழ்வும் பணியும் அடுத்த பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.” என்று அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.

அவரது தொலைநோக்குமிக்க தலைமை டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு, அறத்துடன் கூடிய தொழில்புரிதலுக்கான அளவுகோலாகவும் உலக அளவில் விளங்கியது. நாட்டின் வளர்ச்சியிலும், புதுமையிலும், மனிதநேயச் செயல்பாடுகளிலும் ரத்தன் டாடா காட்டிய இடையறாத அர்ப்பணிப்பினால் கோடிக்கணக்கானோரின் வாழ்வில் அழியாத் தடத்தினை அவர் பதித்துச் சென்றுள்ளார்.

இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டது. எனினும் அவரது வாழ்வும் பணியும் அடுத்த பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.

இத்துயர்மிகு தருணத்தில், ரத்தன் டாடா குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: இந்நிலையில், ரத்தன் டாடா மறைவை ஒட்டி இன்று (அக்.10) ஒரு நாள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மேலும், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இன்று மாலை நடைபெறும் இறுதிச் சடங்கில் மத்திய அரசின் சார்பில் அமித் ஷா கலந்து கொள்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x