Published : 10 Oct 2024 05:56 AM
Last Updated : 10 Oct 2024 05:56 AM
சென்னை: உலக பார்வை தினத்தையொட்டி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் வரும் 31-ம் தேதி வரை குழந்தைகளுக்கான இலவச கண் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. உலக பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி டாக்டர் அகர்வால்ஸ் பார்வை அளவியல் (ஆப்டோமெட்ரி) கல்லூரி சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு கண் கண்ணாடிகள், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. டாக்டர் அகர்வால்ஸ் பார்வை அளவியல் கல்லூரி முதல்வர் கற்பகம், அகர்வால்ஸ் மருத்துவ சேவைகள் துறை பிராந்திய தலைவர் மருத்துவர் எஸ்.சவுந்தரி, குழந்தைகள் கண் நல மருத்துவர் மஞ்சுளா ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மருத்துவர் எஸ்.சவுந்தரி கூறியதாவது: சென்னையிலுள்ள 12 ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கும் 400-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கண் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, சிகிச்சைகளும், கண் கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. உலக பார்வை தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அனைத்து அகர்வால்ஸ் மருத்துவமனைகளிலும் வரும் 31-ம் தேதிவரை குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை நடைபெறுகிறது.
அதில் பங்கேற்க 9594924048 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். உலகம் முழுவதும் 45 கோடி குழந்தைகளுக்கு பார்வைத் திறன் பாதிப்புகள் உள்ளன. அவர்களில் பலருக்கு உரிய சிகிச்சை பெறுவதற்கான வசதிகளோ, வாய்ப்புகளோ இல்லை. இந்தியாவில் 15 வயதுக்கு உட்பட்ட 1,000 பேரில் ஒரு சிறார் அல்லது குழந்தைக்கு பார்வைத் திறன் குறைபாடு உள்ளது.
உலக அளவில் இந்தியாவில்தான் அதிக பார்வை குறைபாடுடைய குழந்தைகள் உள்ளனர். குறிப்பாக, கிட்டப்பார்வை என அழைக்கப்படும் மையோபியா பாதிப்பானது 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 7.5 சதவீதம் பேருக்கு உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT