Published : 10 Oct 2024 05:30 AM
Last Updated : 10 Oct 2024 05:30 AM

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ.8.80 கோடியில் அதிநவீன உபகரணங்கள்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.8.80 கோடி மதிப்பீட்டில் தீக்காய பிரிவில் அதிநவீன மருத்துவ உபகரணங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்தியாவில் தீக்காய சிகிச்சைக்கான 2-வது பெரிய மருத்துவமனையாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை யில் 1973-ம் ஆண்டு 2 படுக்கைகளுடன் தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்து தற்போது 75 படுக்கை வசதிகளுடன் கூடிய தீக்காய சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்படுகிறது.

மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை மையத்தில் கூடுதல் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.8.80 கோடி மதிப்பீட்டில் பல்வேறு தீக்காய பிரிவு உபகரணங்கள் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.358.87 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி ஆதாரத்துடன் 6 தளங்களை கொண்ட 2,68,815 சதுர அடி பரப்பில், 441 படுக்கைகள், 12 அறுவை அரங்கங்கள், ஒரு அறுவை அரங்கம் போன்ற வசதிகளுடன் கூடிய ஒரு டவர் பிளாக் கட்டிடம் ஒன்று கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

மருத்துவ கல்வி மாணவர்களின் கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், நூலக கட்டணத்தை ஆண்டுதோறும் கட்டண நிர்ணய குழுதான் நிர்ணயிக்கும். இந்த ஆண்டு கூட தனியார் கல்லூரிகளை சேர்ந்தவர்கள் கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். ஆனால், கட்டண நிர்ணய குழு, இந்த ஆண்டு உயர்த்த முடியாது. ஏற்கெனவே இருக்கும் கட்டணம் போதுமானது என்று தெரிவித்துவிட்டனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் விடுதி கட்டணம், பேருந்து கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.

இந்நிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகள் கூடுதலாக ரூ.3.5 லட்சம் வரை கட்டணம் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக புகார்கள் வந்தால் கட்டண நிர்ணய குழுவுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x