Published : 10 Oct 2024 05:06 AM
Last Updated : 10 Oct 2024 05:06 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து68 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 98 விசைப்படகுகளிலும் மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
பிற்பகலில் நெடுந்தீவு பகுதியில்கோட்டைப்பட்டினத்தில் இருந்து சென்ற ஏ.கலைவாணனுக்கு சொந்தமான படகில் கே.ரமேஷ்(27), ஆர்.ஜானகிராமன்(27), டி.கிருஷ்ணன்(68), குமார்(40), உ.ரமேஷ்(51), ராஜ்(55), உ.வைத்தியநாதனுக்கு சொந்தமான படகில் அவரது மகன்கள் ரவீந்தர்(42), உலகநாதன்(38), அருள்நாதன்(29), வைத்தியநாதன்(30), முத்து மகன்குமரேசன்(37), ஆர்.மகேஷ்(55), சி.மூர்த்தி என்பவருக்கு சொந்தமான படகில் மதியழகன் மகன்கள் மதன்(27), மகேந்திரன்(20), சுப்பிரமணியன் மகன் முனிவேல் (66), எஸ்.விஜய்(31), சி.விக்கி(18) ஆகியோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதேபோல, கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து அஞ்சலி தேவிக்கு சொந்தமான படகில்மீன்பிடித்த எஸ்.சிவக்குமார்(28),வி.சூரியா(33), எம்.சூரியபிரகாஷ்(25), ஏ.கருப்பசாமி(26) எனமொத்தம் 4 விசைப் படகுகளில் 21 மீனவர்கள் மீன்பிடித்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி அனைவரையும் கைது செய்ததுடன், அவர்களது 4 படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். அவர்களிடம் காங்கேசன் துறை கடற்படை தளத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்வளத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கூறியதாவது: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது, சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிப்பது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், ஒவ்வொரு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்தும் மீன்பிடி தொழிலுக்கு செல்லக்கூடிய படகுகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி, இலங்கை சிறையில்அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வலைகள் அறுப்பு: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சு.அரசப்பன் (எ) முருகேசன் (35) என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில், அவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேலு (24), பாண்டியராஜ் (24), அஜீத் (25), சிதம்பரசாமி (55) ஆகியோரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 14 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒருபடகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளப்பள்ளம் மீனவர்களின் 50 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகளை துண்டித்து எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதேபோல, புஷ்பவனம் மீனவகிராமத்தைச் சேர்ந்த செ.முத்துவேல்(50) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், புஷ்பவனம் மீனவர் காலனி மாதரசன் (26) உள்ளிட்ட 4 மீனவர்கள் நேற்று முன்தினம் புஷ்பவனத்துக்கு தென்கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அன்று இரவு ஒரு படகில் அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் 370 கிலோ மீன்பிடி வலைகளை அறுத்து எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். பின்பு நடந்த சம்பவம் குறித்து மீனவ பஞ்சாயத்தாருக்கு தகவல் தெரிவித்ததுடன், வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், அவர்களுடைய வலை மற்றும் உடைமைகளை கொள்ளையடித்துச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT