Published : 10 Oct 2024 05:37 AM
Last Updated : 10 Oct 2024 05:37 AM

சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் 300 பேர் கைது: முதல்வர் தலையிட சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் போராட்டம் நடத்திய சாம்சங் நிறுவன தொழிலாளர்களை கைது செய்யும் போலீஸார்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நேற்று 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 1,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் 7 பேரை காவல் துறையினர் வீடுவீடாகச் சென்று கைது செய்தனர். அதிகாலை போராட்டத்துக்கு வரும் ஊழியர்களிடம் அடையாள அட்டை உள்ளதா என்பது தொடர்பாகவும் சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “சமூக விரோதிகள், மாவோயிஸ்ட்கள் தொழிலாளர்கள் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து அரசுக்கு எதிரான போராட்டமாக திசை திரும்பவும், வன்முறையை தூண்டிவிடவும் முயற்சிப்பதால் இந்தச் சோதனை நடைபெறுகிறது” என்றனர்.

இந்த நெருக்கடிகளை மீறி சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் கூடி திறந்த வெளியில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின்போது 2 ஊழியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரையும் போராட்டத்துக்கு அணுமதி இல்லாததால் கலைந்து செல்லும்படி போலீஸார் எச்சரித்தனர். போலீஸார் எச்சரிக்கையை மீறி ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நேரத்தில் மழை வந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நீடித்தது. இதனைத் தொடர்ந்து சிஐடியு தொழிற் சங்கத் தலைவர் சவுந்தரராஜன், செயலர் முத்துக்குமார் உட்பட 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கூறியது: காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் இந்த பிரச்சினையில் தலையிட்டு போலீஸாரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அரசு அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்றார்.

சாம்சங் ஆலைக்கு எதிரான போராட்டத்தை சிஐடியு கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதே கருத்தை இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பும் வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x