Published : 09 Oct 2024 09:37 PM
Last Updated : 09 Oct 2024 09:37 PM
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கச்சிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட வீரசூடாமணிபட்டியில் மூர்த்திக்குட்டு மலைச்சரிவில் அமைந்துள்ளது பெரிய கண்மாய். இந்த கண்மாயில் கிபி 1784 ஆம் ஆண்டு வெட்டப்பட்ட மடைத்தூண் கல்வெட்டு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது.
இக்குழுவினருக்கு அப்பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு, கல்லணை சுந்தரம், தங்கடைக்கன், பிரபாகரன் உள்ளிட்டவர்கள் இம்மடை குறித்து தகவல் கொடுத்து, வழித்துணையாக உடன் சென்றனர். கல்வெட்டு குறித்து தொல்லியல் அறிஞர் வேதாச்சலம் கூறியதாவது: “அழகர்சாமி காப்பார், மல்லச்சி காப்பார், மணியம் சாமிப்பிள்ளை முன்னிலையில் அழகன் ஆசாரி நட்டு கொடுத்த நாட்டு கல் என்றும், வீரசூடாமணிபட்டி பெரிய கண்மாயில் இருந்த பழைய மடையை வீரப்பன் அம்பலக்காரர், வீரணன் ஆகியோர் சீரமைப்பு செய்தனர் என்றும் கல்வெட்டு கூறுகிறது. பாண்டியர் கால பாசன ஏரிகள், கண்மாய்கள் ஊர் மக்களால் தொடர்ந்து சீரமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது என்பதனை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த கண்மாயில் நத்தை கொத்தி நாரை, புள்ளி மூக்கு வாத்து, செண்டு வாத்து, சின்ன கொக்கு, பெரிய கொக்கு, முக்குளிப்பான், நீர்காகம், சீழ்கை சிறகி, நீர்க்கோழி, நீலத்தாழைக் கோழி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஈரநில பறவைகள் ஆவணம் செய்யப்பட்டது” என்று அவர் தெரிவித்தார். மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன் கூறுகையில், ‘‘இன்றும் இக்கண்மாய் பயன்பாட்டில் உள்ளது. பண்பாட்டு ரீதியாகவும், பல்லுயிரிய ரீதியாகவும் மிக முக்கியமான வீரசூடமணிபட்டி பெரிய கண்மாயின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள பாறைகள் வீதிகளை மீறி குவாரி பணிக்காக வெட்டப்பட்டு கொண்டு இருக்கிறது அதிர்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT