Published : 09 Oct 2024 09:33 PM
Last Updated : 09 Oct 2024 09:33 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, அர.சக்கரபாணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கொடைக்கானல் நகரில் இருந்து வில்பட்டி, கோவில்பட்டி, புலியூர் வழியாக பெருமாள் மலை அருகே பழநி சாலையை சென்றடையும் வகையில் இந்த சாலை அமையவுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என, தொகுதி எம்.எல்.ஏவான செந்தில்குமார் எதிர்க்கட்சியாக இருந்த போதிருந்து குரல் கொடுத்து வருகிறார். சட்டமன்றத்திலும் பேசியுள்ளார். இதையடுத்து முதலமைச்சர் இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து முதற்கட்ட ஆய்வுக்கு வந்துள்ளோம். மாற்றுப்பாதை அமைப்பது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுப்பாதை அமையவுள்ள சாலை, வனப்பகுதியில் இல்லை என்பதால் விரைவில் இந்த திட்டம் முடிய வாய்ப்புள்ளது.
கொடைக்கானலில் மண்சரிவுகளை தடுக்க ‘மண்ணானி முறை’ என்ற முறையில் பரிசார்த்த முறையாக செயல்படுத்த உள்ளோம். நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்படும் சாலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சரி செய்யப்படவேண்டும் என விதி உள்ளது. ஆனால் கொடைக்கானல் போன்ற ஒரு சில மலைசாலைகளில் மண் உறுதித் தன்மை இல்லாததால் சாலைகள் விரைவில் சேதம் ஆகிறது. எனவே இதுபோன்ற பகுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றப்படவுள்ளது.
தமிழகம் முழுக்க நெடுஞ்சாலையில் உள்ள இடங்களை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் அதை கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். தொடர்ந்து பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் தொகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT