Published : 09 Oct 2024 06:01 PM
Last Updated : 09 Oct 2024 06:01 PM
மதுரை: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது புகாரளித்தது தொடர்பாக மதுரை வழக்கறிஞரிடம் சைபர் க்ரைம் போலீஸார் இன்று நேரில் விசாரணை நடத்தினர். புகார் குறித்த டிஜிட்டல் ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டன.
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் இரு மாநில மக்களிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி கடந்த 4-ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். இப்புகார் தொடர்பாக விசாரணை நடத்த மனுதாரர் என்ற அடிப்படையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு சைபர் க்ரைம் போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலைய அலுவலகத்தில் வாஞ்சிநாதன் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகி புகார் தொடர்பாக விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து பவன் கல்யாண் மீதான புகார் தொடர்பாக, அவர் பேசிய வீடியோ, செய்தித்தாள்கள், ஜனசேனா கட்சியின் யூடியூப் பக்கத்திற்கான லிங்க் ஆகிய டிஜிட்டல் ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வாஞ்சிநாதன், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியதை எதிர்க்கும் வகையில் மிரட்டும் தொனியில் பவன் கல்யாண் பேசினார். மேலும், திருப்பதி கோயில் லட்டு விவகாரத்திலும் தொடர்பே இல்லாத இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் குறித்து மதரீதியாகப் பேசி இரண்டு மாநில மக்களிடையே மோதலை தூண்டும் வகையிலும் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் விதமாகவும் நடந்து கொண்டார்.
எனவே, முந்தைய உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பவன் கல்யாண் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என இன்றைய விசாரணையில் வலியுறுத்தினேன். பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில் நீதிமன்றத்தை நாடுவோம்; தேவைப்பட்டால் இதற்காகப் போராட்டமும் நடத்துவோம். திமுக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் பவன் கல்யாணின் பேச்சுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
அவரது பேச்சுக்குத் தமிழக ஆளுநர் ஆதரவு தெரிவித்துள்ளார். தொடர்ந்து சனாதனத்திற்கு ஆதரவாகச் சாதி மத கட்டமைப்பிற்கு ஆதரவாகப் பேசும் பவன் கல்யாண் 3 திருமணம் செய்துள்ளார். இது சனாதனமா? இதனை ஆளுநர் ஏற்றுக்கொள்வாரா? ஆளுநர் அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT