Last Updated : 09 Oct, 2024 05:07 PM

 

Published : 09 Oct 2024 05:07 PM
Last Updated : 09 Oct 2024 05:07 PM

திசையன்விளை பேரூராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்றதாக அறிவிக்க கோரி அதிமுக கவுன்சிலர்கள் மனு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி தலைவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்றதாக அறிவிக்க வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் திசையன்விளையை தவிர மீதமுள்ள 16 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. திசையன்விளையை மட்டுமே அதிமுக கைப்பற்றியது. இப்பேரூராட்சியில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். இதன் தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜான்சிராணி பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக கவுன்சிலர்கள் பிரேம்குமார், சண்முகவேல் ஆகிய இருவரும் திடீரென்று திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திசையன்விளை பேரூராட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் திமுகவினர் இருந்த நிலையில் 2 கவுன்சிலர்கள் தங்கள் பக்கம் தாவியது திமுகவினருக்கு சாதகமாக அமைந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 13-ம் தேதி 12 உறுப்பினர்கள் திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சி ராணிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி பேரூராட்சிகள் உதவி இயக்குநரிடம் கடிதம் அளித்தனர். அதன் அடிப்படையில் பேரூராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே திமுக கவுன்சிலர்கள் பிரேம்குமார், சண்முகவேல் ஆகியோர் மாவட்ட அதிமுக செயலர் இசக்கிசுப்பையா தலைமையில் மீண்டும் அதிமுகவில் நேற்று இணைந்ததாக செய்திகள் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று வாக்கெடுப்பு நடைபெறும் கூட்ட அரங்கிற்கு ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே வந்திருந்ததால் வாக்கெடுப்பு நடைபெறாமல் எவ்வித முடிவுகளும் அறிவிக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி என்று அறிவிக்கப்படாத நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோல்வி என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் 9 பேர் பேரூராட்சி தலைவி ஜான்சிராணி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் வந்து மாவட்ட பொறுப்பு ஆட்சியரான மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யாவிடம் இன்று முறையிட்டனர். மேலும், வாக்கெடுப்பு குறித்தும் தங்களது மனுவை அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சி ராணி, ''இன்று வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில், போதிய உறுப்பினர்கள் வராததால் தீர்மானம் தோல்வியடைந்தது. ஆனால், நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி என்று அறிவிக்காமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது. உடனடியாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோல்வி என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x