Published : 09 Oct 2024 04:59 PM
Last Updated : 09 Oct 2024 04:59 PM
கோவை: “ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தல் முடிவுகளால் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது,” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (அக்.9) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48-ல் வென்று தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும், 99 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, தான் வென்று விட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் தலைவராக இல்லாமல் அக்கட்சியை வழிநடத்தி வரும் ராகுல் காந்தியை பெரும் தலைவர் போல ஊடகங்கள் சித்தரித்தன. ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும். ராகுல்காந்தி மாயாஜாலம் நிகழ்த்துவார் என, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஊடகங்களில் ராகுல் குறித்த செய்திகளே அதிகம் வந்தன. ஆனால், மக்கள் பாஜகவையே தேர்ந்தெடுத்துள்ளனர்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு கட்சி ஆட்சியை தக்க வைப்பது சாதாரணமான விஷயம் அல்ல. தமிழகத்தில் திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டால், ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றது எவ்வளவு பெரிய சாதனை என்பது புரியும். ஜம்மு - காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின், சட்டப்பேரவை தேர்தல் நடப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் 62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 29-ல் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் 25.64 சதவீதம் அதாவது 14 லட்சத்து 62 ஆயிரத்து 225 வாக்குகளைப் பாஜக பெற்று, அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகளால் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவின் வெற்றி தொடரும்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT