Last Updated : 09 Oct, 2024 04:06 PM

 

Published : 09 Oct 2024 04:06 PM
Last Updated : 09 Oct 2024 04:06 PM

மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

அமைச்சர் அன்பில் மகேஸ்

வாணியம்பாடி: மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (புதன்கிழமை) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து வாணியம்பாடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-2025 கல்வியாண்டுக்கு ரூ.3585.99 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் 60% பங்களிப்பாக அளிக்க வேண்டிய தொகை ரூ.2151.59 கோடி ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு இந்த தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை. இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 27 அன்று பிரதமர் நேரில் சந்தித்து நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினார். ஆனாலும், மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் பெறப்படவில்லை.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 முறையும், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மக்களவை உறுப்பினர்களுடன் நானே நேரடியாக புதுடெல்லிக்குச் சென்று மத்திய கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நான்கு தவணையாக வரவேண்டிய நிதி இதுவரை வரவில்லை.

இதனைத்தொடர்ந்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் நிதி வராததால், 32,298 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்காததால், அவர்களின் வாழ்வாதாரம், மிகப்பெரிய கேள்விக்குறியாக கூடிய நிலைமை தற்போது உள்ளது.முதல் தவணை என சொல்லக்கூடிய ரூ. 573 கோடி உடனடியாக வழங்க வேண்டும்.கடந்த ஆண்டு 4வது தவணையாக ரூ.249 கோடி பாக்கியாக வைத்துள்ளனர். அதையும் வழங்க வேண்டும்.

இது நம்முடைய மாணவர்களின் எதிர்காலம் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளதால் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும்.இதனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இதனை நம்முடைய தமிழக அரசு நிதியிலிருந்து எப்படி பங்கீட்டு சம்பளத்தை வழங்குவது குறித்து, ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக அரசு அவர்களை என்றும் கைவிடாது. அதற்கான பணிகளில் நாங்கள் ஈடுப்படுத்திக்கொள்வோம். ஒவ்வொரு அமைச்சரும் தங்களது துறைகளில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வரின் உத்தரவை ஏற்று, ஒவ்வொரு தொகுதியாக சென்று 219 தொகுதியாக நிறைவு செய்து இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x