Published : 09 Oct 2024 03:27 PM
Last Updated : 09 Oct 2024 03:27 PM

“சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: “சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய தொழிலாளர்களின் நலன் மற்றும் தமிழகத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சிஐடியூ அமைப்பு இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (அக்.9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் பிரச்சினையில், தமிழக முதல்வர் தனிப்பட்ட கவனம் செலுத்தி, ஒரு அமைச்சர் குழுவை அமைத்தார். குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் ஆகியோர் அந்த குழுவில் நியமித்திருந்தார். அமைச்சர் குழுவும் இப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தொழிலாளர்களின் நலனை முக்கியமாக காக்க வேண்டும். அதேநேரத்தில் நமது மாநிலத்தில் இருக்கக்கூடிய படித்த இளைஞர்களுக்கு, அவர்கள் தொடர்ந்து சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற அக்கறையோடு அரசு இந்தப் பிரச்சினையை ஆரம்பத்தில் இருந்து அணுகி வருகிறது. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய தொழிலாளர்களின் நலனைக் கருதி, தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பாக எடுக்கப்பட்டிருக்கக்கூடிய பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் பயனாக, தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க சாம்சங் நிறுவனம் முன்வந்திருக்கிறது.

குறிப்பாக, தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஊதியத்தோடு, ஒவ்வொரு தொழிலாளிக்கும் சிறப்பு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.5000, அக்டோபர் முதல் தேதியில் இருந்து கூடுதலாக வழங்கப்படும். அதேபோல், பணிக்காலத்தில், தொழிலாளி ஒருவர் இறக்க நேரிட்டால், அத்தொழிலாளியின் குடும்பத்துக்கு சிறப்பு உடனடி நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். அனைத்து தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட பேருந்து வசதிகள் உருவாக்கித் தரப்படும். தொழிலாளர்களுக்கு உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்தும் மேம்படுத்தப்படும்.

தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய விடுப்புடன் கூடுதலாக, குடும்ப நிகழ்வு விடுமுறை வழங்கப்படும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றி சாம்சங் நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வந்த தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில், ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் நிறுவனத்தில் இருக்கக்கூடிய சிஐடியூ அமைப்பு தங்களது கோரிக்கையை முன்வைத்து ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் தற்போது நடந்துகொண்டு வர நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், வழக்கின் முடிவு அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை நிச்சயமாக, கட்டாயமாக அதில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலை சிஐடியூ அமைப்பு தொடர்பாக, தொடரப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொழிலாளர் நலத்துறை நிச்சயமாக நிறைவேற்றும். சிஐடியூ அமைப்புக்கு இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், அத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன், தமிழகத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சிஐடியூ அமைப்பு இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அரசின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x