Published : 09 Oct 2024 03:07 PM
Last Updated : 09 Oct 2024 03:07 PM

சென்னையை அழகுபடுத்த சாலை தடுப்புகளில் 10 ஆயிரம் மலர் செடிகளை நட மாநகராட்சி நடவடிக்கை

மலர்ச்செடிகள்

சென்னை: சென்னையை அழகுபடுத்த சாலை தடுப்புகளில் 10 ஆயிரம் மலர் செடிகளை நட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகம் கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட துறைகளில் முன்னேறி இருந்தாலும், மாநில தலைநகரமான சென்னை குப்பை நகரமாகவே காட்சியளிக்கிறது. அதனால் தலைநகரின் முகத்தை பொலிவுறச் செய்யும் வகையில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தீவிர தூய்மைப் பணி, இரவு நேர தூய்மைப் பணி, பூங்காக்களில் தீவிர தூய்மைப் பணி, பேருந்து நிழற்குடைகளில் தூய்மைப்பணி, சுவரொட்டிகளை அகற்றுதல், சாலையோரம் நீண்ட காலமாக நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக மாநகர சாலைகளை மலர்ச்செடிகளால் அலங்கரிக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "சென்னை மாநகராட்சி சார்பில் சாலை நடுவே 113 தீவு திட்டுக்கள் மற்றும் 104 சாலை தடுப்புகளில் பசுமை போர்வையுடன் பராமரிக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் வனத்துறை உதவியுடன் 10 ஆயிரம் மலர்ச்செடிகளை நட்டு சென்னையை அழகுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று சாலை தடுப்புகளில் மலர்ச்செடிகள் நடப்பட உள்ளன. வனத்துறை சார்பில் சென்னையில் நன்மங்கலம், அண்ணாநகர், கரசங்கால் போன்ற பகுதிகளிலும் பல்வேறு மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் மற்றும் புதர் செடி வகையை சேர்ந்த மலர்ச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, சென்னைக்குள் பாரிஜாதம், பவளமல்லி, மகிழம், மந்தாரை உள்ளிட்ட 12 வகையான மலர்ச்செடிகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி, அந்த நீரில் வளரும் விதமாக, நவ.15-ம் தேதிக்குள் செடிகளை நடும் பணிகளை முடிக்க முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x