Published : 09 Oct 2024 12:27 PM
Last Updated : 09 Oct 2024 12:27 PM
சென்னை: சாம்சங் ஊழியர்கள் கைது மற்றும் போராட்டப் பந்தல் அகற்றத்துக்கு சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான காவல்துறை அத்துமீறல் என அவர் கண்டித்துள்ளார். மேலும், சாம்சங் ஊழியர்களின் குடும்பத்தினர் மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.9-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நேற்றிரவு போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்ட பந்தலும் அகற்றப்பட்டது.
இந்நிலையில், சிஐடியு தொழ்ற்சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் இன்று (அக்.9) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “காவல்துறை மிக மோசமான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இப்படியெல்லாம் காவல்துறை செய்வதற்கு சட்டத்தில் இடமே இல்லை. போராட்டம் நடத்தப்படும் இந்த இடம் தனியாருடையது. அப்படியிருக்க இங்கே வந்து கைது செய்ய காவல்துறைக்கு எந்த உரிமையும் கிடையாது. இவ்வளவு அக்கிரமமாக காவல்துறை நடந்து கொள்வது ஆட்சிக்கு நல்லதல்ல.
இதில் முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது காவல்துறை எப்படி எல்லாம் மக்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவி கொடுமைப்படுத்தியதோ அதேபோன்ற காவல்துறை இப்போது நடந்து கொள்கிறது. கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக தொழிலாளிகளை மிரட்டுவதிலும் அவர்களை அச்சுறுத்துவதிலும் காவல்துறையே ஈடுபடுகிறது.
31 நாட்களாக வேலை நிறுத்தம் நடத்துவதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும், இந்தியா முழுவதும் எங்களுடைய எதிர்ப்பை காட்டி வருகிறோம். கார்ப்பரேட்க்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுவது தவறு. அமைச்சர் எங்களுடைய கோரிக்கை என்னவென்றே புரிந்து கொள்ளவில்லை. அவர் புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடிக்கிறாரா என்றே தெரியவில்லை.
சங்கத்தை பதிவு செய்வது என்பது எங்களுடைய உடனடி கோரிக்கை அல்ல. பதிவு செய்தால் எங்களுடைய வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குவோம் என்று எப்போதும்; எங்கேயும் நாங்கள் சொல்லவே இல்லை. ரிஜிஸ்ட்ரேஷன் என்பது இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது எங்களுக்குத் தானாகவே கிடைக்கும். அதற்கு அமைச்சருடைய தயவு எங்களுக்குத் தேவையில்லை.
எங்கள் கோரிக்கை ‘சங்கத்தை ஏற்க வேண்டும்; அங்கீகரிக்க வேண்டும்’ என்பதே. அதைக் கூட நிறுவனத்தை ஏற்றுக்கொள்ள செய்ய இயலவில்லை என்றால் எதற்காக அரசு; எதற்காக ஆட்சி.
நேற்று இரவு முழுவதும் 10 பேரை கைது செய்தார்கள். எல்லா குடும்பங்களையும் அச்சுறுத்தியுள்ளார்கள். எல்லா குடும்பத்திலும் பீதி உண்டாக்கி இருக்கிறார்கள். பெண்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது அரசு செய்யக்கூடிய காரியமா? இதை எந்த வகையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இது காவல்துறையின் அப்பட்டமான அத்துமீறல்.” என்றார்.
ஊழியர்கள் கைது: இந்நிலையில் இன்று காலை முதலே போராட்டப் பகுதியில் பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் போராடி வந்தனர். இதற்கிடையில், போராட்டக் களத்தில் இரண்டு ஊழியர்கள் மயக்கமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பதற்றமான சூழல் நிலவியதால் போராட்டக் களத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஊழியர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தைக்கு முயன்றபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டனர். தற்போது ஊழியர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களை வாகனங்களில் ஏற்றி சுற்றியிருக்கும் தனியார் திருமண மண்டபங்களில் அடைத்துவைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT