Published : 07 Aug 2014 12:00 AM
Last Updated : 07 Aug 2014 12:00 AM

கல்வியோ இலவசம்... அரசு பள்ளிக்கு செல்லவோ பணம்: கூடுதல் செலவால் குமுறும் பெற்றோர்

அரசு தொடக்கப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து செலவு செய்ய வேண்டியுள்ளதால் பெற்றோருக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது என `தி இந்து’ வாசகர் உங்கள் குரலில் தனது வேதனையை பதிவு செய்தார்.

இது குறித்து கோத்தகிரியை சேர்ந்த தமிழ்தாசன் கூறியதாவது:

கோத்தகிரி அருகேயுள்ள காட்டுக்குழி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில், 5 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள குமரன் நகர், வள்ளுவர் நகர், குண்டூர் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகள் சுமார் 50 பேர் படித்து வருகின்றனர்.

குழந்தைகள் வீடுகளில் இருந்து பள்ளி செல்ல உரிய பேருந்து வசதி இல்லை. கோத்தகிரி செல்லும் அரசு பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் பேருந்தில் பள்ளிக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்நிலையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வாகன வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி மாணவர்கள் வாடகை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கான கட்டணம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வந்தனர். இதற்காக மாணவர் ஒருவருக்கு வாரம் ரூ.100 என்ற அடிப்படையில் வாடகை வழங்க வேண்டும். ஆனால், அனைவருக்கும் கல்வி இயக்கம் இந்த வாடகையை இதுவரை வழங்கவில்லை. இதனால் வாடகையை பெற்றோர் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கல்வி இலவசமாக வழங்கப்படும் நிலையில், பள்ளி செல்ல ஒரு மாணவருக்கு மாதம் ரூ.400 செலவு செய்ய வேண்டிய நிலைக்கு ஏழை பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர். தினக்கூலிகளாகப் பணிபுரியும் இந்த மாணவர்களின் பெற்றோர், தங்களுக்கு கிடைக்கும் சிறு வருவாயில் மாதந்தோறும் ரூ.400 கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது என்றார்.

இந்த புகார் குறித்து அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் ரவிகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியது:

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் தொலைதூரம் மற்றும் வாகன வசதியில்லாத மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோத்தகிரி காட்டுக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இத்திட்டம் கடந்தமூன்று மாதங்களாக செயல்படுத்தப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. ஒரு வார காலத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் வாடகைக் கட்டணம் அனுப்பப்படும். பெற்றோர்களுக்கு கட்டணம் திரும்பித் தரப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x