Published : 09 Oct 2024 09:54 AM
Last Updated : 09 Oct 2024 09:54 AM
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறையைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் பாமக சார்பில் நேற்று நடைபெற்றது.
வங்கக்கடலில் மீன் பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள்அத்துமீறி கைது செய்யப்படுவதோடு, ஆண்டுக்கணக்கில் சிறை தண்டனை, கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இவற்றைக் கண்டித்து பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இருந்து பேரணியாகச் சென்று இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
கட்சியின் இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா தலைமையில் நடந்த போராட்டத்தில் கட்சியினர், பல்வேறு அமைப்புகள், மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை தடுத்துநிறுத்திய போலீஸார், 5 பேரைமட்டும் மனு கொடுக்க அழைத்துச் சென்றனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பாமக பொருளாளர் திலகபாமா கூறியதாவது: இலங்கை கடற்படையினரால் 162 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 192 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்டுள்ள படகுகள் மத்திய அரசால் மானிய விலையில் வழங்கப்பட்டவை. பிரதமர்பெயரால் வழங்கிய படகுகள் இன்னொரு நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இந்திய - இலங்கை மீனவர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி மீன்பிடித்தனர். அதேபோன்ற ஒருநிலையை மீண்டும் உருவாக்கித்தர வேண்டும். அதற்கு இரு நாட்டு பிரதிநிதிகளும் அடங்கிய குழு அமைத்து, மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் பேச்சுவார்த்தை மூலம் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT