Published : 09 Oct 2024 06:04 AM
Last Updated : 09 Oct 2024 06:04 AM
சென்னை: வங்கிக் கணக்கில் அதிகளவில் பணம் வைத்திருக்கும் முதியவர்கள், தொழில் செய்பவர்களை குறிவைத்து கும்பல் ஒன்றுசமீபகாலமாக மிரட்டி பணம் பறித்து வருகிறது.
அடையாளம் தெரியாததொலைபேசி எண்களில் இருந்து பேசுபவர்கள், “உங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப புலித்தோல், போதைப் பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், சிம்கார்டுகள், போலி பாஸ்போர்ட்கள் மற்றும் சில கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சல் வந்துள்ளது” எனக் கூறுவார்கள்.
அல்லது தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தில் இருந்து பேசுவதாக கூறி, “உங்களது செல்போன் எண்ணை பயன்படுத்தி பல வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில், கோடிக்கணக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் (ஹவாலா) நடைபெற்றுள்ளது.
எனவே, இதுதொடர்பாக மும்பை சைபர் க்ரைம் போலீஸார் அல்லது சிபிஐபோலீஸார் விசாரணை செய்வார்கள்” எனக் கூறி இணைப்பை, மற்றொரு நபருக்கு ஃபார்வேர்டு செய்வார்கள்.
எதிர்முனையில் மும்பை காவல் துறை அதிகாரி போன்று ஒருவர் பேசுவார். அவர் ஸ்கைப் போன்ற சமூக வலைதள ஆப்பைசெல்போனில் நம்மை பதிவிறக்கம் செய்ய வைத்து, அதன்மூலம் வீடியோ காலில் போலீஸ் போன்று சீருடை அணிந்து கொண்டு மிரட்டும் தொனியில் பேசுவார்.
கைது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றால் அவர்கள் சொல்வதுபோல் பணத்தை அனுப்பும்படியும், அந்தப் பணத்தை ஆய்வு செய்த பின்னர் மீண்டும் உங்களுடைய வங்கிக் கணக்குக்கு பணத்தை திருப்பி அனுப்புவதாகவும் கூறுவார்கள்.
நாம் நமது நேர்மையை நிரூபிக்கவோ, மிரட்டலுக்கு பயந்தோ அவர்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு நமது மொத்த பணத்தையும் அனுப்பி வைத்து விடுவோம். அதன் பின்னர், எதிர் முனையில் பேசுபவரின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும். அதன் பிறகே நாம் ஏமாற்றப்பட்டதை உணர்வோம். இப்படியான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொது மக்கள் இதுபோன்ற மோசடி கும்பலிடம் பணத்தை ஏமாற வேண்டாம். உஷாராக இருக்கும்படி சென்னை மத்தியகுற்றப்பிரிவில் உள்ள சைபர்க்ரைம் போலீஸார் தொடர்ந்து விழிப்புணர்வு எற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகி பாபு மூலம் தற்போது விழிப்புணர்வை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
வீடியோ முடிவில் பேசும் யோகிபாபு, இத்தகைய அழைப்புகளைப் பெற்றால் உடனடியாக அந்த அழைப்பை துண்டித்து அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது சைபர் க்ரைம் உதவி எண்ணான 1930-க்கு அழைக்கலாம் என அறிவுறுத்துகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT