Published : 30 Jun 2018 07:22 PM
Last Updated : 30 Jun 2018 07:22 PM

சென்னை ராயபுரம் ஆதி திராவிட மாணவர் விடுதி மேற்கூரை விழுந்தது: 3 மாணவர்கள் காயம்

சரியான பராமரிப்பின்றி இயங்கும் ராயபுரம் கல்மண்டபத்தில் இயங்கும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். பல ஆண்டுகளாக பரமரிப்பின்றி விடுதி இயங்குவதாக மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னையில் கல்லூரிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் சமுதாய மாணவர்களுக்காக ராயபுரம் கல்மண்டபத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. 1980-ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தை மராமத்து பார்ப்பதோடு அரசு தனது வேலையை நிறுத்திக்கொள்வதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.

25 ஆண்டுகள் கடந்தாலே அக்கட்டிடத்தின் தன்மையை பொறுத்து புதிதாக கட்டுவது அல்லது மராமத்து பார்ப்பது நடக்கும். ஆனால் இந்த கட்டிடம் கட்டி 38 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் கட்டிடத்தின் பல பகுதிகள் பாழடைந்து பழுதடைந்து காணும் நிலையில் அதிகாரிகள் கண்டுக்கொள்வதே இல்லை என்கின்றனர் மாணவர்கள்.

இது குறித்து எஸ்சி.எஸ்டி விஜிலென்ஸ் குழு உறுப்பினர் எஸ்.கே.சிவா கூறுகையில், “ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் வரும் இக்கட்டிடத்தில் உயர்கல்வி மாணவர்களுக்கான இந்த விடுதியில் சுமார் 300-க்கும் அதிகமான மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாத நிலையில் இவ்விடுதியின் வார்டன் பூவராகவன் 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக பராமரிப்பில்லாத விடுதியின் அறைகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதால் பல மாணவர்கள் தலையில் அடிபட்டு சிகிச்சைப் பெற்றுள்ளனர். கடந்த நான்கு மாத்திற்கு முன்பு அறை எண் 8-ல் மாணவர்கள் படுத்திருந்த போது மேல் தளம் இடிந்து விழுந்துள்ளது, அதேபோல் இரண்டு மாத்திற்கு முன்பு அறை எண் 4-ல் மேல் தளம் இடிந்து விழுந்ததில் மணிகண்டன் என்ற மாணவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.

கட்டிடம் பழுதுப்பட்டு உள்ளதை கடந்த 45 நாட்களாக கல்லூரி விடுமுறை நாளில் சரி செய்திருக்க வேண்டும், ஆனால் சரி செய்யாமல் விட்டதன் விளைவு, இந்த ஆண்டு விடுமுறை முடிந்து சில நாட்கள் முன்பு துவங்கிய விடுதியில் நேற்று இரவு மீண்டும் மாணவர்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நள்ளிரவு 1.30மணிக்கு அறை எண் 12-ல் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.

இதில் உறங்கிக்கொண்டிருந்த அண்ணா பல்கலைக்கழக மாணவர் ராஜ்குமார், நாந்தனம் அரசு கல்லூரி மாணவர் பெரிய சாமி, உலக தமிழ் ஆராய்ச்சி மைய மாணவர் ஆறுமுகம் ஆகியோர் படுகாயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

விடுதி காப்பாளரை இடமாற்றம் செய்ய வேண்டும், விடுதியை உடனடியாக சீர்செய்ய வேண்டும், மாணவர்களின் உயிர்கள் மீது இனிமேலும் அரசு அலட்சியம் காட்டக் கூடாது. நடைபெற்ற சம்பவத்தை சரி செய்வதற்கு பதில் மூடி மறைக்கவே அதிகாரிகள் முயல்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் திடீரென அதிகாரிகள் சிலர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு நெருக்கடி கொடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களை டிஸ்சார்ஜ் செய்ததாக மாணவர் தரப்பில் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x