Published : 08 Oct 2024 09:26 PM
Last Updated : 08 Oct 2024 09:26 PM

கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்து ஐ.டி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகள் வழக்கு

சென்னை: தங்களது கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை தி.நகர் ஸ்ரீ லட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலரான திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகள் ஜெ.ஸ்ரீனிஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “மருத்துவம், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கல்லூரிகளைத் தொடங்கி மாணவர்களுக்கு உயர் கல்வி அளிக்கும் நோக்கில் ஸ்ரீ லட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை கடந்த 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பிறகு அறக்கட்டளை சார்பில் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

அந்த பல்கலைக்கழகத்தின் கீழ் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ லட்சுமியம்மாள் பொறியியல் கல்லூரி, ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி என பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளின் வருமானம் எங்களது அறக்கட்டளை மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அறக்கட்டளைக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் எனது வீடு மற்றும் சகோதரர் ஜெ.சந்தீப் ஆனந்த் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தி டைரி உள்ளிட்ட சில ஆவணங்களை கைப்பற்றினர்.

பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை உதவி ஆணையர் 2011-12 முதல் 2016-17 வரையிலான ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பித்தார். அதன்படி அந்த நோட்டீஸூக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு மீண்டும் இது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டது. அப்போது மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கல்வி கட்டண தொகை மூலமாக கேண்டீன் உள்ளிட்ட கல்லூரி கட்டுமானங்கள் மற்றும் கல்வி நிமித்தமான செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக வருமான வரித்துறையின் இடைக்கால தீர்வை ஆணையத்திலும் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆக.30-ம் தேதியன்று ஸ்ரீ லட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளையின் 12ஏஏ பதிவை வருமான வரித்துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் மாணவர்களிடம் நன்கொடை வசூலித்ததாகவோ, நிதியை தவறாக கையாண்டதாகவோ, சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாகவோ எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் மாணவர்களின் உயர்கல்வியை பாதிக்கும் வகையில் அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்து வருமான வரித்துறை உத்தரவிட்டு இருப்பது சட்டவிரோதமானது. எனவே அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என அதில் கோரியுள்ளார். இந்த மனு விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x