Published : 08 Oct 2024 06:06 PM
Last Updated : 08 Oct 2024 06:06 PM
திண்டுக்கல்: “இப்போது நாங்கள் பாஜகவுக்கு எதிரி. ஆனால், இன்னும் 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை” என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறியுள்ளார்.
திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று (அக்.8) நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “திண்டுக்கல்லில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதற்கு திண்டுக்கல்லே சாட்சி. காட்சி மாறுவதற்கு ஆட்சி மாறவேண்டும்.
அண்ணா தொடங்கிய கட்சியை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்பட்டார். அதேபோல் ஸ்டாலின் தனது மகனை துணை முதல்வர் ஆக்கியுள்ளார். அடுத்து இன்பநிதி துணை முதல்வராக ஆக்கப்படுவார் என நினைக்கிறோம். உள்ளாட்சி தேர்தல் நடக்குமா நடக்காதா என்பதை ஆளுங்கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.
எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. தேவையில்லாமல் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது. விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறோம். மாநாட்டைத் தொடர்ந்து அவர் என்ன செய்ய உள்ளார் என்பதை இனி தான் பார்க்க வேண்டும். தற்போது எந்த விமர்சனமும் விஜய்க்கு எதிராக கிடையாது.
2026 தேர்தலை சந்திக்க இன்னும் 16 அமாவாசைகள் இருக்கின்றன. 10 அமாவாசை முடிந்தவுடன் திமுக கூட்டணியில் உள்ள அனைவரும் எடப்பாடியுடன் சேர்ந்து கொள்வார்கள். மக்களும் அதிமுகவுக்கு வாக்களிப்பதற்கு தயாராக உள்ளனர். கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க நாங்கள் தயார். ஆனால், கூட்டணி அமையும் பட்சத்தில் அதனை உதாசீனப்படுத்த முடியாது. கூட்டணி வந்தால் ஏற்றுக் கொள்வதுதான் ஜனநாயக கடமை.
அனைவரும் சேர்ந்தால் தான் ஓசை எழுப்ப முடியும்.பாஜக உடனான கூட்டணி குறித்து இப்போது ஜோசியம் சொல்ல முடியாது. சூழ்நிலையை பொறுத்துத்தான், தேர்தல் வரும்பொழுது தான் அதுகுறித்து தெரியவரும். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. இப்போது நாங்கள் பாஜகவுக்கு எதிரி. ஆனால், இன்னும் 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT