Published : 08 Oct 2024 03:58 PM
Last Updated : 08 Oct 2024 03:58 PM
சென்னை: “சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு, மூன்று பொறுப்பு அமைச்சர்களை நியமித்து, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், இன்னும் போராட்டத்தை தொடர்வது ஏன் என்று தெரியவில்லை? சிஐடியு சங்கத்தை பதிவு செய்வது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால், அவ் வழக்கின் முடிவை பொறுத்து அக்கோரிக்கை குறித்து முடிவெடுக்கப்படும், என்று நிறுவனம் தெரிவித்துள்ளதால் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்.”என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.8) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பின்னர், “தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சாம்சங் நிறுவன தொழிலாளர் பிரச்சினையை பொறுத்தவரை தமிழக முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். 7 முறை தொழிலாளர் துறை சார்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இன்னும் தீர்வு எட்டபடாத வகையில் உள்ளது. இந்த போராட்டத்துக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்ததன் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். மூன்று அமைச்சர்கள் சேர்ந்து 10 முதல் 12 மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. முதலில், நிறுவனத்திடம் பேசினோம், பின் சிஐடியு மற்றும் அதுசார்ந்த தோழர்களிடம் பேசி அவர்களுடைய கருத்துகளைப் பெற்றோம். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களிடமும் பேசினோம். தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தால், வேலை வாய்ப்பு வழங்கியவர்கள் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள். சிஐடியு சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. அவர்களுடைய மற்ற கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.
இந்த சிஐடியு சங்கத்தை பதிவு செய்வது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், எதுவும் செய்ய முடியாது என்று நிறுவனம் கூறுகிறது. இந்த ஒரே ஒரு கோரிக்கைக்காக தொழிலாளர்கள் இன்றும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
அந்த நிறுவனத்தில், சமீபத்தில் திருமணமான இளைஞர்கள் பலர் பணிபுரிகிறார்கள். 12-ம் வகுப்பு, ஐடி படித்தவர்களுக்கு கூட எழுபதாயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகிறார்கள். ஆனால், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் முறையாக பணிக்கு வராமல் இருந்து வருவதாக, நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு வந்து கையெழுத்து போட வேண்டும் என்றுகூட அவசியமில்லை. அனைத்து மாதங்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளனர். 5 பேருந்துகளில் குளிர்சாதன வசதி உள்ள நிலையில், மேலும் 108 பேருந்துகளுக்கும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தி தருவதாக கூறியிருக்கிறார்கள். உயர்தர உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், கழிவுநீர் வசதிகளை சரி செய்து தருவதாகவும் கூறியிருக்கிறார்கள். வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்தாலும் அதையும் நிறைவேற்றி தருவதாகவும், சிஐடியு சங்கத்தை பதிவு செய்வது வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கின் முடிவை பொறுத்து அக்கோரிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் நிறுவனத்தின் தரப்பில் கூறி உள்ளனர்.
தமிழக முதல்வர் நேரடியாக இதில் தலையிட்டு, மூன்று பொறுப்பு அமைச்சர்களை நியமித்து, பலகட்ட பேச்சு வார்த்தை நடத்திய பிறகும், இன்னும் போராட்டத்தை தொடர்வது ஏன் என்று தெரியவில்லை. வேலை செய்யாத ஒவ்வொரு நாளும் அந்த குடும்பத்துக்கும் ஊதியம் கிடைக்காது. இந்த ஒவ்வொரு நாள் தாமதத்தால், ஊதியம் பாதிக்கும். இன்னும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் தொழிலாளர்கள் பக்கம் நிற்கிறார். எனவே, தொழிலாளர்கள் அனைவரும் தயவுசெய்து பணிக்கு திரும்ப வேண்டும். பத்தாண்டு காலம் கிடைக்காத வளர்ச்சியை மூன்றே ஆண்டுகளில் கொண்டுவந்த சேர்த்து 10 லட்சம் கோடி முதலீடுகளை கொண்டு வந்து சேர்த்து 30 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர் தமிழக முதல்வர்.
இந்தப் போராட்டத்தை போட்டியாளர்கள் திசை திருப்ப வாய்ப்பு உள்ளது. மற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை கருதி, உங்களால் எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதை மனதில் வைத்து, தொழிலாளர்கள் பக்கம் தமிழக அரசும் முதல்வரும் நிற்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். சிஐடியு வின் ஒரே கோரிக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். வழக்கு நிலுவையில் உள்ளது வழக்கு முடிவு வந்தபின் அதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களிடம் பேச தயார். ஆனால் அவர்கள், சிஐடியு பதிவு வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT