Last Updated : 08 Oct, 2024 02:11 PM

4  

Published : 08 Oct 2024 02:11 PM
Last Updated : 08 Oct 2024 02:11 PM

அதிமுக ஆட்சி அமைந்ததும் மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகள் இணைப்பு ரத்து: முன்னாள் அமைச்சர் தங்கமணி

நாமக்கல் நேதாஜி சிலை அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டார்.

நாமக்கல்: அதிமுக தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் எந்தெந்த கிராம ஊராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டதோ அவை அனைத்தையும் ரத்து செய்து மீண்டும் கிராம ஊராட்சிகளாகவே செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார்.

நாமக்கல்லில் சொத்து வரி உயர்வு தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று (அக்.8) நடைபெற்றது. நகரச் செயலாளர் கே.பி.பி.பாஸ்கர் தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று பேசினார். மனித சங்கிலி போராட்டத்தின் போது, மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு, போதைப் பொருள் விற்பனை அதிகரிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது; "நாமக்கல் மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கப்போவதாகச் சொல்லியுள்ளார்கள். இதற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். திமுகவினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளை, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்டவற்றுடன் இணைக்கக் கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் கிடைக்காது என மக்கள் அஞ்சுகின்றனர். ஆனால் இந்த அரசு அதற்கு செவி சாய்ப்பதாக இல்லை. வரும் 2026ம் ஆண்டு அதிமுக தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், எந்தெந்த கிராம ஊராட்சிகள் நகராட்சி, மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்டதோ அவை ரத்து செய்து மீண்டும் கிராம ஊராட்சிகளாகவே செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பில் இருந்தார். அப்போது மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இப்போது அதைவிட அதிகமான மக்கள் வருவர் என இந்த அரசுக்குத் தெரியும். ஆனால், மாநகராட்சி சார்பில் ஒரு குடிநீர் தொட்டிகூட வைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் குடிநீர் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டன. மொபைல் குடிநீர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

ஆனால் இதுபோன்ற எந்த அடிப்படை வசதியும் இப்போது செய்யப்படவில்லை. இதற்கு சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள சுப்பிரமணியன், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக நீர் சத்து குறைந்து அதனால் இறந்துவிட்டார்கள் எனச் சொல்கிறார். அது மட்டுமல்ல 15 லட்சம் பேர் கூடி இருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் துறையினரையா நியமிக்க முடியும் என மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் ஒரு அமைச்சர் சொல்கிறார்.

முதல்வரும் இதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார், இதுதான் மக்களின் நிலைமை என்பதை புரிந்து கொண்டு 2026ல் அதிமுக ஆட்சி அமைய மக்கள் வழிவகை செய்வர். மெரினாவில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யவில்லை என்று அங்கு சென்றவர்கள் பேட்டி கொடுக்கின்றனர். சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இது போன்ற மோசமான ஏற்பாட்டை நான் பார்த்ததில்லை எனச் சொல்கிறார். அதை வைத்துத்தான் நாங்களும் சொல்கிறோம்.” என்று தங்கமணி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x