Published : 08 Oct 2024 01:00 PM
Last Updated : 08 Oct 2024 01:00 PM

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை: தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அதன்படி, வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்துக்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேருவையும், தேனி மாவட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமியையும், திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலுவையும், நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டத்துக்கு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தையும், தென்காசி மாவட்டத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனையும்,கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவையும் நியமித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணியும், கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தியையும, பெரம்பலூர் மாவட்டத்துக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரையும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனையும் நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x