Published : 08 Oct 2024 08:02 AM
Last Updated : 08 Oct 2024 08:02 AM
சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக, ஐநா அமைப்பின் 2024 ஆண்டுக்கான “United Nation Interagency Task Force Award” தமிழக சுகாதாரத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது, தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உலக நாடுகள் அளவில் "மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தினை செயல்படுத்தியதற்காக கடந்த மாதம் 25-ம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடந்த 79-வது ஐக்கிய நாடுகள் பொது சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் பயனாளிகளின் இல்லங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த10-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 1,80,00,844 பயனாளிகள் முதன்முறை சேவைகளையும், 3,96,66,994 நபர்கள் தொடர் சேவைகளையும் பெற்று வருகின்றனர். சர்வதேச அளவில் வழங்கப்பட்டுள்ள பெருமைமிகு இவ்விருதானது தமிழக அரசுக்கு மேன்மேலும் சிறப்புற செயல்படுவதற்கான புதிய உத்வேகத்தையும், அடுத்தகட்ட உயர்நிலையை அடைவதற்கான உந்துதலையும் அளித்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவு: இந்திய துணை கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக, நமது அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு உலக அங்கீகாரம் தேடிவந்துள்ளது. சிறப்பான முறையில்இந்தத் திட்டத்தை செயல்படுத்தி,கண்காணித்து மேம்படுத்தி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், அவருக்கு துணை நிற்கும் சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT