Published : 08 Oct 2024 08:29 AM
Last Updated : 08 Oct 2024 08:29 AM

தேவிபட்டினம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு

கோயிலின் தூண் போதிகையில் உள்ள கல்வெட்டு.

ராமேசுவரம்: தேவிபட்டினம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே பெருவயலில், ரெணபலி முருகன் கோயில் கட்டயத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி (கி.பி.1728-1735) மன்னரின் (பிரதானி) வைரவன் சேர்வைக்காரரால் கட்டப்பட்டது. அவருக்கு பின் கி.பி.1736-ல் குமாரமுத்து சேதுபதி பெருவயல் கலையனூர் எனும் கிராமத்தை கோயிலுக்கு தானமாகக் கொடுத்த கல்வெட்டு இந்த கோயிலில் உள்ளது.

இந்நிலையில் இந்த கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியமன்னர் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கண்டெடுத்து படியெடுத்து ஆய்வு செய்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:

புதிதாக கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு, கோயில் திருச்சுற்று வடமேற்குமூலையில் உள்ள தூண் போதிகையில் உள்ளது. இதில் “(சந்தி) விக்கிரகப் பேறும் மற்றும் எப்பேர்பட்டின(வும்), ரன்னொம் கைக்கொண்டு திருப்படி மாற்றுள்(ளிட்டு), செம்பிலும் வெட்டிக்கொள்க, இவை மதுரோதய வளநாட்டுக் காஞை (இருக்கை), பெருமணலூர் மந்திரி இராமனான ப(ல்லவ ராயன்)” என உள்ளது.

கல்வெட்டில் சொல்லப்படும் பெருமணலூர் மந்திரி இராமனான பல்லவராயன் என்பவர், முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியாவார். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி, திருத்தங்கல், ஈஞ்சார் கோயில் கல்வெட்டுகளில் இவரது பெயர் குறிப்பிடப்படுகிறது.

இந்த கல்வெட்டு 800 ஆண்டுகள் பழமையான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1244)காலத்தைச் சேர்ந்ததாகும். பாண்டியர் காலத்தில் இந்த கோயிலுக்கு தானம்வழங்கப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கிறது. இதில் சந்தி விக்கிரகப்பேறு என்ற வரியும், மதுரோதய வளநாட்டுக் காஞை இருக்கை என்ற நாட்டுப் பிரிவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூணின் மேல்பகுதியை உத்திரத்துடன் இணைக்கும் விரிந்த கை போன்ற அமைப்பை போதிகை என்பர். பாண்டியர், நாயக்கர், சேதுபதி மன்னர் காலங்களில் கட்டப்பட்ட கோயில் தூண்களில் வெவ்வேறு வகையான போதிகைகளை அமைத்து அழகுபடுத்துவர்.

கல்வெட்டு உள்ள வெட்டுப் போதிகை எனும் அமைப்பு பாண்டியர் காலத்தை சேர்ந்ததாகும். பாண்டியர் கால வெட்டுப் போதிகைகளை சேதுபதிகால கருங்கல் தூண்களுடன் இணைத்து இக்கோயில் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது.

வெட்டுப் போதிகை கற்கள் இவ்வூரில் இருந்து அழிந்து போன ஒரு பாண்டியர் கால சிவன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x