Published : 08 Oct 2024 06:18 AM
Last Updated : 08 Oct 2024 06:18 AM
காஞ்சிபுரம் / சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாம்சங் ஊழியர்கள் வேலை நிறுத்த விவகாரத்தில் அமைச்சர்கள் - தொழிற்சங்கம் இடையேயான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இன்று விடை தெரியும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் சிஐடியு சார்பில் சங்கம் அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பனஉட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 29-வது நாளாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்சங் பணியாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக சுமுக தீர்வுஎட்டும் வகையில், முதல்வர்மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை, தொழிலாளர் துறை செயலர்கள், தொழிலாளர் ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினர், சிஐடியுமாநில தலைவர் சவுந்தரராஜன், செயலர் முத்துக்குமார் மற்றும் சாம்சங் தொழிலாளர்கள் குழுவினருடன் நேற்று பேச்சுவார்த்தைநடத்தினர். இந்த பேச்சுவார்த்தைஇருங்காடு கோட்டை சிப்காட்பகுதியில் உள்ள தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்குப் பின், சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கூறும்போது, “அமைச்சர்கள், செயலர்கள் அடங்கிய குழுவினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேசும்போது எங்கள் கருத்துகளை நாங்கள் தெரிவித்துள்ளோம். தொழிலாளர்கள் என்ன நடந்தது, 16 ஆண்டுகளாக சங்கம் அமைக்காத நிலையில்தற்போது சங்கம் அமைக்கப்பட்டதன் அவசியம், சங்கம் அமைக்க கட்டாயப்படுத்தப்பட்டது குறித்தும் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர்கள் கூறினர். அதுதான் எங்கள் விருப்பம் என்று தெரிவித்தோம். சட்டத்தில் இருப்பதை தவிர்த்து நாங்கள்எதையும் கேட்கவில்லை. இதுகுறித்து நிர்வாகத்திடம் பேசி பதிலை சொல்லுங்கள் என்று கூறியுள்ளோம். நிர்வாகத்துடன் அவர்கள் பேசிய பின், என்னவென்று பார்க்க வேண்டும். இன்றைய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. நிர்வாகத்துடன் பேசுவதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர்’’ என்றார். பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறும்போது, “இதுதொடர்பாக நாளை முடிவு தெரியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT