Published : 08 Oct 2024 06:30 AM
Last Updated : 08 Oct 2024 06:30 AM

விமான சாகசத்தை காணவந்தபோது நடந்த துயரம்: மெரினாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கதறல்

ஜான், சீனிவாசன், கார்த்திகேயன்

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் விமான சாகசத்தை கண்டுகளித்துவிட்டு வீடு திரும்பியபோது 5 பேர் உயிரிழந்தனர். இதைக் கண்டு அவர்களது குடும்பத்தினர் கதறி துடித்தது காண்போரை கண்கலங்க வைத்தது.

மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியைக் காண சுமார் 15 லட்சம் பேர் ஒரே நேரத்தில் திரண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால் கூட்ட நெரிசல் மற்றும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அதுவும் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி இருந்ததால் குழந்தைகள், சிறுவர்கள், வயோதிகர்கள், உடல்நலம் குன்றியவர்கள், பெண்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். இவர்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இறந்தவர்களில் சென்னை கொருக்குப்பேட்டை, அனந்தநாயகி நகரைச் சேர்ந்த ஜான்(56) என்பவரும் ஒருவர். இவர் வீட்டிலேயே சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் தொழில் செய்து வந்தார். விமான சாகச நிகழ்ச்சியை எப்படியாவது நேரில் பார்வையிட வேண்டும் என்ற ஆசையில் மனைவி மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் அதிகாலையிலேயே மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.

பின்னர், அங்கு நடைபெற்ற விமான சாகசத்தை கைதட்டி, ஆரவாரம் செய்து உற்சாகமாக பார்த்துவிட்டு தங்கள் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் மெரினாநீச்சல் குளம் பின்புறம் வழியாகசென்றபோது திடீரென அங்கேயேமயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சிஅடைந்த அவரது குடும்பத்தினர்,ஜானை மீட்டு ஓமந்தூரார் அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஜான் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு குடும்பத்தினர் கதறி துடித்தனர்.

மகளின் ஆசை.. இதேபோன்று, புதுபெருங்களத்துரை சார்ந்த ஸ்ரீனிவாசன்(48) என்பவரும் மெரினாவுக்கு வந்திருந்தார். தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் தொழில்நுட்ப வல்லுநராக வேலை பார்த்து வந்த ஸ்ரீனிவாசனுக்கு வனிதா என்ற மனைவி, ஹேமந்த்(15) என்ற மகன், வர்ஷா(11) என்ற மகள் உள்ளனர். மகள் வர்ஷாவின் ஆசையை நிறைவேற்ற வேலை நாளான ஞாயிற்றுக்கிழமை மாற்று விடுப்பு எடுத்துக் கொண்டு மகளை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மெரினா வந்திருந்தார்.

நிகழ்ச்சி முடிந்து மகளுடன் வீடு திரும்பியபோது சேப்பாக்கத்தில் எம்எல்ஏ விடுதி அருகே வழியில் இருசக்கர வாகனத்திலிருந்து மயங்கி கீழே விழுந்த ஸ்ரீனிவாசன், மகள் கண் எதிரே உயிரிழந்தார். இதைக் கண்டு அவரது மகள் கதறி அழுத்து காண்போரை கண்கலங்கச் செய்தது. மகள் மீது அதிக பாசம் கொண்டு அவரது ஆசை நிறைவேற்ற சென்ற தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதேபோல் திருவொற்றியூர் ஆர்.எம்.வி நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(34) என்பவர் மனைவி சிவரஞ்சனி மற்றும் 3 வயது மகனுடன் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்தபோது உயிரிழந்தார். மனைவி, மகனை நேப்பியர் பாலம் அருகே விட்டுவிட்டு, அருகில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. 2 மணி நேரத்துக்கு பிறகே அவர் மயங்கி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிவரஞ்சனி கண்ணீர் வடித்தபடி கூறும்போது, ‘மதியம் 1.20 மணியளவில் நேப்பியர் பாலம் அருகே வந்தோம். அங்கு எங்களை அமர வைத்துவிட்டு, இருசக்கர வாகனத்தை எடுத்து வருகிறேன் என சென்றவர் திரும்பவில்லை. செல்போனில் அவரை தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. மதியம் 3.30 மணியளவில் எனது செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர் இங்கு ஒருவர் மயங்கி கிடக்கிறார் என்று தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்து அவர் கூறிய இடத்துக்கு சென்றபோது கணவர் அசைவின்றி கிடந்தார். உடனே கணவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திகேயன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தால் கணவரை காப்பாற்றி இருக்கலாம்’ என்றார்.

இதேபோல், சென்னை மடுவாங்கரையைச் சேர்ந்த தினேஷ் குமார், ஆந்திராவைச் சேர்ந்த மணி(55) ஆகியோரும் மெரினாவில் மயங்கிய நிலையில் உயிரிழந்திருந்தனர். இவர்களது பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஒட்டு மொத்தத்தில் 5 பேரின் மரணமும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x