Published : 23 Jun 2018 02:40 PM
Last Updated : 23 Jun 2018 02:40 PM
தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய பாடத்திட்டங்களை வகுத்துவருகிறது. பள்ளிக் கல்வித் துறையின் இத்தகையை செயல் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதற்கேற்ற வகையில் இந்த ஆண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு 2,7,10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தினையும், அதற்கு அடுத்த ஆண்டு முதல் 3,4,5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டத்தினை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த சூழலில் இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில் தொழில் பாடப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையை பள்ளி நிர்வாகங்கள் தவிர்த்து வருகின்றன. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி பாடப் பிரிவுக்கான ஆசிரியர், இந்த ஆண்டுடன் ஓய்வுபெற்ற நிலையில் புதிய ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. மாறாக கடந்த ஆண்டு தொழிற்பாடப் பிரிவில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்த மாணவர்கள், இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பிற்கு தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துவருகிறது.
மேலும் மற்ற பள்ளிகளில் தொழிற்பாடப் பிரிவுகளில் சேரவரும் மாணவர்களை மூளைச் சலைவை செய்து, வேறு பாடப் பிரிவில் சேர்ந்து பயிலும் படி அறிவுத்தப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றநர்.
பொதுவாக அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய ஒரு பாடப்பிரிவாகவே தொழிற்கல்வி பாடப்பிரிவு கருத்தப்படுகிறது. மேலும் டிப்ளமோ மற்றும் பொறியியல் கல்லூரிக்குச் செல்ல வாய்ப்பில்லாத ஏழைக் குடும்பத்தை மாணவர்களுக்கான வாய்ப்பாகவும் பாடப் பிரிவு அமைந்திருந்தது.
பிளஸ் 1 வகுப்பில் தொழிற்பாடப் பிரிவு நீக்கப்பட்டது தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு வகிக்கும் ஆர்.முருகனிடம் கேட்டபோது, “தொழிற்பாடப் பிரிவு நீக்க முடிவுசெய்துள்ளது. அதற்கான ஆசிரியர் தேர்வும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு முதல் தொழிற்பாடப் பிரிவில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இது தொடர்பாக கல்வியாளர் ஆயிஷா நடராஜன் கூறுகையில், “ஏழை எளிய மாணவர்களுக்கு தொழிற்கல்வி மூலம் வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. அது தற்போது தடைபட்டுள்ளது. பட்டப் படிப்பு முடித்திருந்தாலும் திறன் இல்லாத பட்டதாரிகளே கல்லூரிகள் மூலம் வெளிவருகின்றனர் என்ற கருத்துள்ள நிலையில், பட்டப்படிப்பு இல்லாத நிலையில் தொழிற்கல்வி பயின்று திறனுடன் கூடிய மாணவர்களை பள்ளிகள் உருவாக்கி வந்தது. ஆனால் ஏழை எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அரசு எடுத்திருக்கும் முடிவு ஆபத்தானது. இது கல்வியை கடை சரக்காக்கும் முயற்சி. கல்வியை தனியார் மயமாக்க அரசு மேற்கொண்டு முயற்சிகளில் இதுவும் ஒன்று” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT