Last Updated : 07 Oct, 2024 08:41 PM

3  

Published : 07 Oct 2024 08:41 PM
Last Updated : 07 Oct 2024 08:41 PM

விமான சாகச நிகழ்ச்சிக்காக கூடுதல் ரயில் சேவை அளிக்காதது ஏன்? - சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம்

சென்னை: விமான வான் சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்க சென்னை மெரினாவுக்கு வந்த மக்களுக்கு ரயில்வே நிர்வாகம் போதிய மின்சார ரயில் சேவை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய விமானப்படை சார்பில், மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பார்க்க, சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து மூலமாக காலை 7 மணி முதல் சென்னை மெரினா கடற்கரை நோக்கி வரத்தொடங்கினர். அதிலும், சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து மின்சார ரயில்களில் சென்னை கடற்கரைக்கு மக்கள் வந்தனர்.

காலை 8 மணிக்கு பிறகு, செங்கல்பட்டு - கடற்கரை, திருவள்ளூர்- சென்ட்ரல், வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை ஆகிய ரயில் மார்க்கங்களில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. வேளச்சேரி, திருமயிலை, தாம்பரம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்பட பல ரயில் நிலையங்களுக்கு மக்கள் வந்தும் ரயில்களில் ஏற முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதனால், பெரும்பாலான மக்கள் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினர். சாகச நிகழ்ச்சிக்கு பிறகு, வீடு திரும்பிய மக்களும் கடும் சிரமத்தை சந்தித்தனர். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து வேளச்சேரி, சிந்தாதிரிப்பேட்டை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில்களில் ஏறமுடியாத அளவுக்கு கூட்டம் காணப்பட்டது. வான் சாகச நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிந்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி குறைவான மின்சார ரயில்சேவை இயக்கப்பட்டதாகவும், பறக்கும் ரயில் மார்க்கத்தில் 20 நிமிடத்துக்கு ஒரு ரயிலே இயக்கப்பட்டதாகவும் பயணிகள் குற்றச்சாட்டினர்.

இந்நிலையில், இதற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியது: “சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதை அமைக்கும் பணி நடப்பதால், கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை கிடையாது. அதேநேரத்தில், சிந்தாதிரிபேட்டை- வேளச்சேரி இடையே உள்ள நிலையங்களுக்கு தான் ரயில் சேவை இயக்கப்படுகிறது. 4-வது பாதை பணி தொடங்குவதற்கு முன்பு, கடற்கரை- வேளச்சேரி மார்க்கத்தில் தினசரி 140 ரயில் சேவைகள் இயக்கப்பட்டன.

பணி தொடங்கியபிறகு, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே இரு மார்க்கமாகவும் தினசரி தலா 40 சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை எதுவும் பின்பற்றப்படவில்லை. சாகச நிகழ்ச்சி நடைபெறும் என்பது முன்னதாக தெரிந்தாலும், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி, ரயில் இயக்கினாலும் பாதிப்பு தான் ஏற்படும். திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல், செங்கல்பட்டு - கடற்கரை உள்ளிட்ட வழித்தடங்களில் இருந்து மின்சார ரயில்களில் பொதுமக்கள் வந்தாலும், சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி மார்க்கத்தில் குறைவான ரயில்களே கையாளப்படுவதால், இங்கு மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

எனவே, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியே ரயில்கள் இயக்கப்பட்டன. அதேநேரத்தில், சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை நடைமுறையில் இல்லை. 4-வது பாதைக்கான பணி காரணமாக, கூடுதல் ரயில் சேவை இயக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை. இதுதவிர, மாநில அரசும் எங்கள் அதிகாரிகளுடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை” என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x